ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை : ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை : ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
x
தினத்தந்தி 2 July 2019 4:55 AM IST (Updated: 2 July 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று புதுச்சேரி அரசை போல, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை என்று ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.

சென்னை, 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி கடலூர் மாவட்டம், புவனகிரி பஸ்நிலையம் அருகே டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.,) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தது. இதற்கு அனுமதி கேட்டு போலீசில் விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், ‘தமிழகத்தில் எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டம் நடத்துவதே முழுநேர தொழிலாக வைத்துள்ளனர். போராட்டம் நடத்தினால், எப்படி தமிழகத்தில் தொழில் வளரும்?’ என்று சரமாரியாக கேள்வி கேட்டு, கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதுபோன்ற அறிவிப்பு தமிழக முதல்-அமைச்சர் வெளியிடவில்லை. அதனால்தான் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தப்படுகிறது’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளதே’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘அந்த அரசாணையில், நைஜீரியா நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், விவசாய பகுதி முழுவதும் பாலைவனமாகி விட்டது. அதனால், காவிரி-டெல்டா பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் ஆபத்து வருமா? என்பதை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஆனால் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்பந்த பணி வழங்கியுள்ளதே?’ என்றார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story