சுற்றுச்சூழல் தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள் : அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்


சுற்றுச்சூழல் தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள் :  அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 2 July 2019 5:09 AM IST (Updated: 2 July 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் பற்றிய தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள் வழங்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்தபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை சேகரித்து, இந்தத் துறையின் கீழ் வரும் தமிழ்நாடு காலநிலை மாற்றப்பிரிவின் மூலம் முதலில் 3 ஆண்டுகளுக்கு தகவல் பரப்பு சேவை வழங்கப்படும். இந்த ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

காலநிலை மாற்றம் குறித்த அறிவை பயிற்றுவிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை தகவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற காலநிலை ஸ்டூடியோ ஏற்படுத்தப்படும்.

கடற்கரை பகுதிகள், கழிமுகங்கள், ஏரிகளில் நுண் பிளாஸ்டிக் பொருட்களின் நிலை குறித்த மதிப்பீடும், ஆய்வும் இந்த ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படை தகவல்கள், தாக்கங்கள் பற்றி தெரிந்துகொண்டு தீர்வுக்கான மேலாண்மை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 இடங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்பு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள ஓடத்துரை ஏரி, இந்த நிதியாண்டில் சூழல் மறுகொணர்வு செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும். காற்றின் தன்மையை கண்காணிக்கும் திறனை அதிகரிக்க 8 மாவட்டங்களில் புதிய காற்றுத்தர மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவில் 351 ஆறுகள் மாசடைந்துள்ளதாகவும், அதில் தமிழகத்தில் 6 ஆறுகள் உள்ளதாகவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மாசை குறைப்பதற்கான செயல்திட்ட அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நீர்தர மேலாண்மைப் பிரிவு உருவாக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக 300 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு எல்.சி.டி. புரஜக்டர் கருவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story