தண்ணீர் லாரிகளை கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், தண்ணீர் லாரிகளை முறையாக பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை நங்கநல்லூரில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சி லாரிகள் மூலம் சவுந்தரராஜன் உள்பட 5 பேர் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, காட்டுப்பாக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஷீலாதேவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தண்ணீர் லாரிகள் எல்லாம் உரிமம் பெற்றுள்ளதா?, எத்தனை லாரிகள் அவ்வாறு உரிமம் பெற்றுள்ளன? என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி காஞ்சீ புரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், நங்கநல்லூரில் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுப்பது குறித்து பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் எல்.சந்திரகுமார் என்பவரை வக்கீல் ஆணையராக நியமிக்கிறோம். இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் விரிவான விளக்கத்தை வக்கீல் ஆணையருக்கு, கலெக் டர்கள் வழங்க வேண்டும்.
மேலும், சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், தங்கள் மாவட்டத்தில் ஓடும் தண்ணீர் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, எத்தனை பேர் வணிக ரீதியாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களையும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தெரிவிக்க வேண்டும்.
இந்த விளக்கத்தை வக்கீல் ஆணையருக்கு வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். மேலும், தண்ணீர் லாரிகள், மாவட்ட கலெக்டர்கள் அலுவலங்களில் முறையாக பதிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசு பத்திரிகைகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு அறிவுறுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story