நீலப்பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதரை 2-வது நாளாக தரிசனம் செய்த பக்தர்கள்
காஞ்சீபுரத்தில் நீலப்பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதரை நேற்று 2-வது நாளாக ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் செய்வார். இந்த நிலையில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை கோவில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று 2-வது நாளாக அத்திவரதர் நீலநிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் பேட்டரி வாகனங்கள் மூலம் அத்திவரதரை தரிசித்தனர்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு அத்திவரதர் இருக்கும் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
பிறகு ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பக்தர்கள் உள்ளே செல்ல சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.50 நேற்று முன்தினம் மட்டும் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜ், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story