எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி சவால்
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று ராகுல்காந்தி பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ததாகவும், அதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏன் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசி இருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதே கருத்தை தேனி பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியபோது, அதை வன்மையாக மறுத்து கடந்த ஏப்ரல் 14-ந் தேதி கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன். இப்போது மீண்டும் அதே கருத்தை வெளியிட்டு இருக்கிறார். ஒரு பொய்யை நூறுமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார்.
இந்த பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? எந்த ஊடகத்திலாவது ராகுல்காந்தி இப்படி பேசியதாக வெளிவந்திருக்கிறதா? தமிழக முதல்-அமைச்சரை சவால் விட்டு கேட்கிறேன், அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? அப்படி வெளியிட முடியவில்லை என்றால் ஆதாரமற்ற அவதூறு கருத்தை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story