ரெயில் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -ரெயில்வே எச்சரிக்கை


ரெயில் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -ரெயில்வே எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 July 2019 4:07 PM IST (Updated: 3 July 2019 6:02 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்கின்றனர். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ரெயில் பயணிகளுக்கு, பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில்களில் பயணம் செய்ய குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் சிலர் அந்த டிக்கெட்டை கூட எடுக்காமல் ஓசியில் பயணம் செய்கின்றனர்.

இதுபோன்று டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். 

ரெயில்களில் படிக்கட்டில் நின்று ஆபத்தை உணராமல் சிலர் ‘சாகச பயணம்’ செய்கின்றனர். சாகச பயணிகளிடம் உள்ளே வந்து நிற்குமாறு கூறினால் ‘காற்று வாங்குவதற்காக நிற்கிறேன் உங்கள் வேலையை பாருங்க’ என அடுத்த பதிலில் வாயை அடைக்கின்றனர். இவ்வாறு பயணிப்பவர்கள் மீது ரெயில்வே சட்டம் ‘156’ பிரிவின் கீழ் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது.

பரங்கிமலை அருகே கோர விபத்து ஏற்பட்ட போதிலும் அதன் ஆபத்தை உணராமல் ரெயில் படிக்கட்டு பயணம் தினமும் தொடர்கிறது. இந்நிலையில்  ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Next Story