சட்டசபையில் காரசார விவாதம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் - சி.வி.சண்முகம் உறுதி


சட்டசபையில் காரசார விவாதம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் - சி.வி.சண்முகம் உறுதி
x
தினத்தந்தி 4 July 2019 5:33 AM IST (Updated: 4 July 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி, சட்டசபையில் தி.மு.க. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தொடர்பாக தி.மு.க. உறுப்பினர். டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.):- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் புகுத்த கூடாது. காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்க அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:- காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது, மரபுசாரா கனிமங்களை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி எண்ணெய் வளம் உள்பட அனைத்து விதமான இயற்கை வளங்களை ஒரே நிறுவனம் எடுக்க மத்திய அரசு அதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்போவதில்லை.

விவசாய நிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதி வழங்காது. மாநில அரசின் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு தனது ஒப்புதலை தற்போது வரை வழங்கவில்லை, இனியும் வழங்காது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை.

ஆனால், தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டது போல எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரும் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் எந்த வித உண்மையும் இல்லை. 2010-2011-ம் ஆண்டு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.தான் அனுமதி வழங்கியது. அதாவது ஆய்வு செய்வதற்கு அந்த நிறுவனத்துக்கு தி.மு.க. அனுமதி கொடுத்தது.

எல்லோரும் கவனிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு செய்ய தி.மு.க. அனுமதி கொடுத்தது. 2011-க்கு பிறகு முதல்-அமைச்சராக வந்த ஜெயலலிதா டெல்டா பகுதி விவசாய மக்களின் உணர்வுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்து இந்த திட்டம் பற்றி ஆலோசித்து, தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த வழங்கப்பட்ட அனுமதியையும் ஜெயலலிதா தான் ரத்து செய்தார். எனவே ஜெயலலிதாவின் கொள்கை தான் இப்போதும் இந்த அரசின் கொள்கை, ஜெயலலிதா வழியில் சொன்னதை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் அ.தி.மு.க. அரசு அது தொடர்பான ஆய்வுக்கோ அல்லது உற்பத்திக்கோ நிச்சயம் அனுமதி கொடுக்காது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஒரு போதும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்.

டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.):- அமைச்சர் பேசும் போது, ஏதோ தி.மு.க. ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உரிமம் வழங்கியது போல பேசுகிறார். அது தவறு. தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- நான் அதற்குள் போக வேண்டாம் என்று நினைத்தேன். நான் இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. மேலோட்டமாகத்தான் பதில் சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்கள் (தி.மு.க. உறுப்பினர்) என்னை விரிவாக பதில் அளிக்க வைக்கிறீர்கள். நீங்கள் எத்தனை தடவை கூறினாலும் நடந்த உண்மையை மறைக்க முடியாது. 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி இருந்தபோது தான் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தது. 1-1-2011-ல் தமிழக அரசு தமிழ் நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கலாம் என்று இசைவு தந்தது. அப்போது மத்திய மந்திரியாக இருந்தது உங்கள் தந்தை தான். எனவே உங்கள் ஆட்சியில் தான் இசைவு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் ஹைட்ரோ கார்பன் எடுக்க நீங்கள் ஆய்வுக்கே அனுமதி கொடுத்திருக்க கூடாது என்பது தான்.

அந்த காலக்கட்டத்தில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அதிகாரி ராஜீவ் ரஞ்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் கையெழுத்தாகி உள்ளது. ‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’ என்ற நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அனுமதியை தி.மு.க. அரசு கொடுத்துள்ளது.

(இவ்வாறு பேசிய சி.வி.சண்முகம், தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபோது, மு.க.ஸ்டாலினுடன், அதிகாரிகள் இருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தி.மு.க. அரசு வெளியிட்டு இருந்த அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்த, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு செய்ய தி.மு.க. அரசு வழங்கிய அனுமதியையும், ஆய்வுக்கு பிறகு உற்பத்தி அனுமதி கிடைக்க உதவி செய்வோம் என்று தி.மு.க. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பையும் வாசித்து காட்டினார்).

மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் விளக்கம் தரும் போது தவறான தகவலை தருகிறார். அனுமதி அளிப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமை கிடையாது. மத்திய அரசு தான் அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் பவர் தான் அது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து தான் போடப்பட்டது.

சி.வி.சண்முகம்:- தமிழ் நாட்டுக்குள் ஹைட்ரோ கார்பன் திட்டமே வரக்கூடாது என்று தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் ஏன் அந்த திட்டத்துக்காக ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்?

துரைமுருகன்:- பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் ஆய்வு நடத்த அனுமதி என்பது வேறு, அனுமதி என்பது வேறு, ஆய்வையே முடிவு என்று நீங்கள் எடுத்துக்கொள்ள கூடாது.

சி.வி.சண்முகம்:- கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்படியே சாப்பிட முடியாது வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் இப்படி ஆய்வுக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. பிறகு ஏன் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துகிறீர்கள்? மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக? பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதன் நோக்கம் தான் என்ன? மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- நீங்கள் என்ன தான் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லிக்கொண்டிருந்தாலும் மத்திய அரசு அதையும் மீறி அதனை கொண்டு வருகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற காரணத்தால் தான் அதை கண்டிக்க கூடிய வகையில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை அமைச்சருக்கும், இந்த அரசுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு நடத்தினால் கூட அ.தி.மு.க. அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழ்நாட்டுக்குள் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றே எதையும் செய்ய முடியும். எனவே நீங்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட விவசாய மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது. நம்முடைய நோக்கம் விவசாய மக்களை காப்பது தான்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story