ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் -தேர்தல் ஆணையம்


ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் தொகுதி  பாராளுமன்ற தேர்தல் -தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 4 July 2019 7:52 AM GMT (Updated: 4 July 2019 7:52 AM GMT)

ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

சென்னை

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கதிர்ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் எல்லாம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வேலூர்  பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5 ந்தேதி  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் அறிவிப்பு ஆணை வெளியாகும் நாள் - ஜூலை 11

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- ஜூலை 18

வேட்பு மனு பரிசீலனை- ஜூலை 19

வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்- ஜூலை 22 

தேர்தல் நடைபெறும் நாள்- ஆகஸ்ட் 5 

வாக்கு எண்ணிக்கை- ஆகஸ்ட் 9

Next Story