வேலூர் தொகுதிக்கு ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் மனு தாக்கல் 11-ந் தேதி தொடங்குகிறது
பண பட்டுவாடா புகாரால் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு, ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
17-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
வேலூர் தொகுதி
தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. கூட்டணியின் சார்பில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அ.ம.மு.க. சார்பில் பாண்டுரங்கனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேசும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லட்சுமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் சில வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.
வருமான வரி சோதனையில் சிக்கிய பணம்
வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து மார்ச் 27-ந் தேதி காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லம், அவருடைய மகன் கதிர் ஆனந்த் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் ஏராளமான ரொக்க பணமும், ஆவணங்களும் சிக்கின.
இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேர்தல் ரத்து
பண பட்டுவாடா புகாரை தொடர்ந்து, வேலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷன் ஏப்ரல் 16-ந் தேதி உத்தரவிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் பண பட்டுவாடா புகார் காரணமாக ஒரு தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும்.
வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அந்த தொகுதி நீங்கலாக தமிழகத்தில் மற்ற 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி கிடைத்தது.
ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் எப்போது நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஆகஸ்டு 5-ந் தேதி வாக்குப்பதிவு
இந்த நிலையில் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறும் என்று நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆகஸ்டு 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 19-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 22-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறும்.
ஓட்டு எண்ணிக்கை
பதிவான வாக்குகள் ஆகஸ்டு 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் ஆகஸ்டு 11-ந் தேதியுடன் முடிவுக்கு வரும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிய உதவும் கருவிகள் (விவிபாட்) பயன்படுத்தப்படும்
வேட்பாளர்கள் யார்?
வேலூர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், முக்கிய கட்சிகளின் சார்பில் முன்பு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களே மீண்டும் போட்டியிடுவார்களா? அல்லது புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
Related Tags :
Next Story