கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கட்டப்படும் வீடுகள் எவ்வளவு? பட்டியலிட்டு, ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்படும் வீடுகள் எவ்வளவு என்பது குறித்து சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு விளக்கினார்.
சென்னை,
சட்டசபையில், தி.மு.க. உறுப்பினர் மதிவாணன் (கீழ்வேளூர்), கஜா புயலால் பாதிக்கப்பட்ட கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
நாகை மாவட்டம்
கஜா புயலால், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இம்மாவட்டங்களில் நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவதற்காக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலமாக மொத்தம் 28,671 வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளாக ரூ.1,742.22 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணி தொடங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,458 தனி வீடுகள் ரூ.298.32 கோடி மதிப்பீட்டிலும், 5,308 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.477.72 கோடி மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 12,766 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் ரூ.776.04 கோடி மதிப்பீட்டில் 12 நகரங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
துரிதமாக பணிகள் தொடங்கப்படும்
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 313 புதிய தனி வீடுகள் ரூ.12.52 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் கட்டும் பணிகள் பயனாளிகளின் தலைமையில் விரைவில் மேற்கொள்ளப்படும்.
தனி வீடுகள் அவரவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் 300 சதுர அடி பரப்பளவில் ரூ.2,10,000 என்ற மதிப்பளவில் கட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
அடுக்கு மாடி குடியிருப்புகளாக ஜி பிளஸ் 2 என்ற திட்டத்தின்கீழ் கட்டப்பட இருக்கிறது என்பதையும், 400 சதுர அடியாக இருக்கும் என்றும், இன்னொரு திட்டத்தின்கீழ், ரூ.2,10,000 திட்ட மதிப்பீட்டில் ஏற்கனவே குடிசை வீடுகளில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 சதுரஅடியில் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதனையும், கூடிய விரைவில் இந்தப்பணிகள் தொடங்கப்படும் என்பதனையும், அவசர, அவசியத்தைக் கருதி இந்த பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டு பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவாரூர்-புதுக்கோட்டை
மற்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை சட்டமன்ற செயலகத்தில் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தனி வீடுகளாக 1,217 வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளாக 960 குடியிருப்புகளும் ஆக மொத்தம் 2,177 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 5,502 வீடுகள் தனி வீடுகளாகவும், 4,284 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், ஆக மொத்தம் 9,786 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி வீடுகளாக 2,518 வீடுகளும், அடுக்குமாடி வீடுகளாக 400 சதுர அடி பரப்பளவில் 1,424 வீடுகளும், ஆக மொத்தம் 3,942 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தம், தனி வீடுகளாக 16,695 வீடுகளும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாக 11,976 வீடுகளும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தமாக 28,671 வீடுகள் தனி வீடுகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, உரியவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேள்வி-பதில்
சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பெரியண்ணன் அரசு (புதுக்கோட்டை), புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், எப்போதும் பூட்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘உறுப்பினர் தவறான தகவலை தெரிவிக்கிறார். சத்தியமூர்த்தி நகரில் 136 வீடுகள் இருக்கிறது. இதில் 31 வீடுகள் தான் காலியாக உள்ளது’ என்றார்.
மீண்டும் பேசிய பெரியண்ணன் அரசு, அந்த குடியிருப்பு சம்பந்தமாக சில விவரங்களை தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘உறுப்பினர் என் பதிலை கேட்கும் மனநிலையில் இல்லை. தான் கேட்ட கேள்வியை நியாயப்படுத்துகிறார். அங்கு ஏதோ ஒரு பெண் இறந்து விட்ட சம்பவத்தை வைத்து யாரும் குடியிருக்கவில்லை என்று கூறக்கூடாது. நான் தெளிவாக கூறி விட்டேன் 136 வீடுகளில் 31 வீடுகள் தான் காலியாக இருக்கிறது. கட்டிடமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story