தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்


தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 7:08 PM GMT)

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வரவே வராது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக கூறினார்.

சென்னை, 

சட்டசபையில் எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

24 மணிநேரத்தில் ஒரு நிமிடம் மின்சாரம் தடைபட்டாலும், என்ன நடந்தது என்பது தெரியாமல் மக்கள் கோபப்படுகின்றனர். மின் கடத்தி, இன்சுலேட்டர் போன்றவற்றில் சிறு கீறல் விழுந்தால்கூட அது உடனடியாகத் தெரியாது. அப்படிப்பட்ட பழுதை சரிசெய்யத்தான் காலதாமதம் ஏற்படுகிறதே தவிர, அது மின் தடையல்ல.

மின் தட்டுப்பாடு வராது

தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. இந்த நிலை தக்க வைக்கப்படும். எனவே மின் தட்டுப்பாடு இங்கு வரவே வராது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 13 ஆயிரத்து 995 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக இணைத்திருக்கிறோம். தமிழகத்தின் மின்சாரத் தேவை 15 ஆயிரத்து 600 முதல் 16 ஆயிரம் மெகாவாட் ஆக உள்ளது.

காற்றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று கூறினாலும், அதை நம்பியிருக்க முடியாது. 2011-ம் ஆண்டு 200 மில்லியன் யூனிட் என்ற மின் உற்பத்தி தற்போது 345 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.

துணை மின்நிலையங்கள்

மின்சாரம் இருந்தால்கூட அதை சீராக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கு துணை மின்நிலையங்கள் தேவை. கடந்த 9 ஆண்டுகளில் 507 புதிய துணை மின்நிலையங்களை அமைத்திருக்கிறோம்.சென்னையில் மட்டும் 21 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் கடுமையான வெயில் காலத்திலும் மின்வெட்டு இல்லை.

சென்னையின் மின்சாரத் தேவை மட்டும் 3,738 மெகாவாட் ஆகும். ஆனால் கேரள மாநிலத்தின் மின்சாரத் தேவையே 3 ஆயிரம் மெகாவாட்தான். அந்த அளவுக்கு சென்னையில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 40 துணை மின்நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

6,500 மெகாவாட் மின்சாரம்

தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் வரைக்கும் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 76 லட்சமாகும். அவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

உடன்குடி, எண்ணூர் உள்ளிட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான மின்சாரத் திட்டங்கள் மூலம் 2021-22-ம் ஆண்டில் தமிழகத்துக்கு 6,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

மேலும், 800 மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதில் மராட்டிய மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா வரை மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. அங்கிருந்து மின்சாரத்தை கொண்டுவர தமிழகத்தில் பூமிக்கு அடியில் புதைவடம் அமைக்கக் கூறுகிறார்கள். கம்பம் அமைக்க இடம் கிடைப்பதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் 2028-29-ம் ஆண்டுக்குள் 11 ஆயிரத்து 356 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்சாரத்தின் விலையில் மத்திய அரசு கூடுதலாக 44 பைசா உயர்த்தியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக மின்சார வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

மதுவிலக்கு, அரசின் கொள்கை

மதுவிலக்குதான் தமிழக அரசின் கொள்கை. மதுவின் வளர்ச்சி, 1971-ம் ஆண்டு சாராயக் கடைகளை அனுமதித்ததில் இருந்துதான் தொடங்குகிறது. நாங்கள் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம்.

ஆரம்பத்தில் 6,837 மதுக்கடைகள் என்றிருந்த நிலை மாறியுள்ளது. இரண்டு முறை தலா 50 கடைகள் மூடப்பட்டன. என்றாலும், தற்போது 5,152 கடைகள் மட்டுமே உள்ளன. எனவே சொல்லாமலும் பல கடைகளை மூடியிருக்கிறோம் என்பது தெரியவரும். மைக்ரோ பீர் என்ற மதுபானம் வந்திருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது இங்கு தலைதூக்க முடியாது.

கஜா புயல் சேதம்

கஜா புயலில் முதல்-அமைச்சர் அறிவித்த சேத மதிப்புக்கும், கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள சேத மதிப்புக்கும் வித்தியாசம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் சேதத்தின் முழு அளவும் தெரிய வந்தது. தண்ணீர் வற்றிய பிறகுதான் புயலில் சாயந்த கம்பங்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரிய வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story