சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 7:13 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழியாக்கப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதிருப்பது குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மொழியாக்கம்

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தலைமை நீதிபதி முன்வந்திருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உள்ளபடியே அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. அரசியல் சட்டம் தந்திருக்கக்கூடிய கூட்டாட்சி தத்துவத்தின் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உறுதியாக நிற்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக வந்திருக்கின்றது.

ஆங்கிலம் தவிர கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இனிமேல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து கிடைத்திட ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கின்றது. ஆனால், அந்த மொழிகள் பட்டியலில் தமிழ்மொழி மாத்திரம் இடம்பெறவில்லை. உள்ளபடியே அது ஏமாற்றமளிக்கிறது, வருத்தத்தையும் தருகின்றது.

தீர்மானம்

இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் மூத்த தொன்மைமிக்க தமிழ்மொழி இடம்பெற்று இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்த மன்றத்தில் அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வரக்கூடிய நேரத்தில் தி.மு.க. சார்பில் நாங்கள் அதனை ஏகமனதாக வரவேற்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

முதல்-அமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டுவருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்கு மொழி என்ற அரசினர் தீர்மானத்தை இதே அவையில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபொழுது 6-12-2006 அன்று இந்த அவையில் அதனை நிறைவேற்றி கவர்னர் பரிந்துரையோடு, ஜனாதிபதியிடம் சென்று, கருணாநிதி 8-12-2006 அன்று நேரடியாக கொடுத்ததை நான் இந்த அவைக்கு நினைவுகூற விரும்புகின்றேன். எனவே ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழி என்ற அந்த தீர்மானத்தையும் தமிழக அரசின் சார்பில் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

மாற்றுக்கருத்து இல்லை

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:- இது தொடர்பான தகவல் அரசுக்கு வரவில்லை என்றாலும், பத்திரிகை வாயிலாக அறிந்துகொண்டிருக்கிறோம். இந்தி, மராத்தி, தெலுங்கு, அசாம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளில் முதல்கட்டமாக தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் இருந்து அதிகளவில் வழக்குகள் வருகிறதோ, அதனை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சமீபத்தில் பேசும்போது, அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். எனவே விரைவில் அதில் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.

பொறுத்து பார்ப்போம்

மு.க.ஸ்டாலின்:- ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் கருத்துகள் இதில் ஒற்றுமையாக இருக்கின்றது. எனவே, சட்டசபையில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது. எனவே இந்த நேரத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் அழுத்தம் கொடுப்பதுபோல் ஆகிவிடும் என்பது என் கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம், அதன்பிறகு முதல்-அமைச்சருடன் கலந்து பேசி மேற்கொண்டு நல்ல முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story