திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்


திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

சென்னை, 

சட்டசபையில் கேள்வி நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) பேசியதாவது:-

பாதாள சாக்கடை திட்டம்

திருச்செந்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 7-1-2010-ல் ஆரம்பிக்கப்பட்டு அரசால் 28-12-2015 அன்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த திட்டம் முழுமையடையாமல் அந்த பகுதியில் இருக்கின்ற ஏறக்குறைய 638 பேர் எங்களுக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வேண்டும் என்று கேட்டு, அதில் 113 பேருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த திட்டம் முழுமையடையாமல், கழிவு நீர் அகற்றப்படும்போது சுத்திகரிக்கப்படுகின்ற அந்த நீர் மீண்டும் எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளத்தினுடைய உபரிநீர் வருகின்ற கால்வாயிலேயே திருப்பி விடப்பட்டு, மீண்டும் அது திருச்செந்தூரையே சுற்றி வருகிறது.

ஏற்கனவே இந்த திட்டம் தொடங்குகின்றபோது, இந்த நீரை திருச்செந்தூர் அருகில் இருகின்ற ஆலந்தலை பகுதியில் 86 ஏக்கர் இடத்தை எடுத்து, அதில் கீரைத்தோட்டங்கள், மரச்சாலைகள் எல்லாம் அமைப்பதற்கான திட்டங்கள் வகுத்தார்கள். ஆனால் அந்த நீர் முழுவதும் மீண்டும் திருச்செந்தூருக்கே வந்து, அந்த பகுதியை அசுத்தம் செய்கின்ற நிலை தான் இன்றைக்கு இருக்கிறது.

அமைச்சர்கள் அத்தனை பேரும் திருச்செந்தூருக்கு வருகிறார்கள். ஆங்காங்கே பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டதன் காரணமாக உடைந்து, கழிவு நீர் வெளியே வருகிறது. எனவே இந்த பாதாள சாக்கடை திட்டத்தை மறுபடியும் நன்றாக ஆய்வு செய்து, அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவேற்றப்படும்

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

திருச்செந்தூர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.14.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக இதுவரை 10 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 39,800 பேர் பயன்பெறுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. திருச்செந்தூர் என்கின்றபோது அதிகமான மக்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பகுதியாக இருக்கிறது. எனவே கண்டிப்பாக துறை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உறுப்பினர் கூறிய சிரமங்களை நீக்கி, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story