உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒப்பந்தப்படி ரூ.2,375 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்சாலைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் படி ரூ.2,375 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்சாலைகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் படி ரூ.2,375 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்சாலைகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய தொழிற்சாலைகள்
கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, எக்கி கோமா என்ற நிறுவனம் கோவை கணபதி பகுதியில் ரூ.15 கோடி முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் விசை பம்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும், சிர்மா டெக்னாலஜி என்ற நிறுவனம் சென்னை தாம்பரம் மெப்ஸ் தொழிற்பூங்காவில் ரூ.75 கோடி முதலீட்டில் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும், ரினாட்டஸ் புரோகான் என்ற நிறுவனம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.50 கோடி முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் தொடங்கி உள்ளது.
ரூ.140 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் வணிக உற்பத்தியை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.
அடிக்கல் நாட்டினார்
அதேபோன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களான காஞ்சீபுரம் மாவட்டம், ஓரகடத்தில் ரூ.730 கோடி முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காற்றாலைகளுக்கான இறக்கைகள் மற்றும் அதற்கான சிறப்பு தனிம கலவைகளை உற்பத்தி செய்யக்கூடிய அமெரிக்க நிறுவனமான டி.பி.ஐ. காம்போசைட்ஸ் நிறுவனம், சுங்குவார்சத்திரத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மறுசுழற்சி செய்யக்கூடிய மகேந்திரா ரீசைக்ளிங் நிறுவனம்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிர்லா குழுமத்தின் ஹைடெக் கார்பன் நிறுவனம், திருவள்ளூர் இண்டோஸ்பேஸ் தனியார் தொழிற்பூங்காவில் ரூ.150 கோடி முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள மகேந்திரா ஸ்டீல் சர்வீஸ் நிறுவனம், பெரியபாளையத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள காளஸ்வரி குழுமத்தின் புதிய பயோடீசல் உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அடிக்கல் நாட்டினார்.
ரூ.2,375 கோடி மதிப்பு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 370 கோடி ரூபாய் முதலீட்டில் 1,300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள மோத்தி குழும நிறுவனம், சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 130 கோடி ரூபாய் முதலீட்டில் 1,625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள எஸ்.பி. அப்பரல்ஸ் நிறுவனத்தின் நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் 37 கோடியே 66 லட்சம் ரூபாய் முதலீட்டில் 65 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள சக்தி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா சமுத்திரப்பேடு கிராமத்தில் 47 கோடி ரூபாய் முதலீட்டில் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள சன் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் புதிய வாகன உதிரிபாக ஒருங்கிணைப்பு தொழிற்சாலை, கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் 168 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்படவுள்ள கிருஷ்ணவேணி கார்பன் நிறுவனத்தின் கார்பன் சீல், பேரிங்குகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் 80 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள வெல்போவ் மெட்டல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன ஸ்டியரிங் உற்பத்தி தொழிற்சாலை,
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் 40 கோடி ரூபாய் முதலீட்டில் 230 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள கல்வானா டிராக் நிறுவனத்தின் கனரக வாகன உதிரிபாக தொழிற்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் முதலீட்டில் 141 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ள ரெங்கநாயகி பேப்பர்ஸ் நிறுவனத்தின் காகித உற்பத்தி தொழிற்சாலை என மொத்தம் 2,375 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நிறுவப்பட உள்ள 13 தொழிற்சாலைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச்செயலாளர் நா.முருகானந்தம், தொழில் துறை சிறப்புச்செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் முனைவர் நீரஜ்மிட்டல், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story