மத்திய அரசு அனுமதியில்லாமல் ஜாபர்சேட் வழக்கை விசாரணைக்கு ஏற்றது சட்டவிரோதம் : கீழ் கோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
மத்திய அரசு அனுமதி வழங்காதபோது, டி.ஜி.பி. ஜாபர்சேட் மீதான வழக்கை கீழ் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஜாபர்சேட். இவர், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக பதவி வகித்தார். அப்போது, திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் இவருக்கு வீட்டுமனை ஒதுக்கியது. பின்னர் இந்த ஒதுக்கீட்டை ரத்துசெய்து, ஜாபர்சேட்டின் மனைவி பெயருக்கு நிலத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கியது.
இந்த வீட்டுமனை வழங்கியதில், மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில், சவுக்கு சங்கர் என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது முறைகேடு, கூட்டுச்சதி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிறப்பு கோர்ட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பெயரில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்போது, அதற்கு மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின்னரே, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், ஜாபர்சேட் விவகாரத்தில், மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கவில்லை. ஆனாலும், அனுமதி இல்லாமலேயே ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜாபர்சேட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்து, கடந்த மே 23–ந்தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், ‘ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே, குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவேண்டும். ஆனால், அனுமதியில்லாமலேயே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கீழ் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அதில், என் தரப்பு வாதங்களை கேட்காமலேயே ஒருதலைபட்சமாக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கை ஐகோர்ட்டு ரத்துசெய்தது தன்னிச்சையானது. எனவே ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் என்ன சட்டவிரோதம் உள்ளது? ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கிற்கு அனுமதி வழங்க முடியாது என்று 2013–ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்காதபோது, அந்த வழக்கு விசாரணை நீதிமன்றம் எப்படி இதுநாள் வரை விசாரணையில் வைத்து இருந்தது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
மேலும், ‘மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்று, அவருக்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியதே சட்டவிரோதம்’ என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் மனுதாரர் வக்கீலிடம், ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்க முடியாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால், மத்திய அரசின் அந்த உத்தரவை எதிர்த்து உரிய நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரலாம்’ என்று கூறிய நீதிபதிகள், இந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.