சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை ‘அ.தி.மு.க.-தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து தடுப்போம்’ : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சேலம் உருக்காலை தனியாருக்கு சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து அழுத்தம் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் உருக்காலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்:- சேலம் உருக்காலை பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டம். 16.9.1970-ல் இந்திராகாந்தி நேரில் வந்து திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மிகவும் லாபகரமாக இயங்கி வந்த இந்த ஆலை, பல்வேறு காரணங்களால், நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலையை தற்போது தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் டெண்டர் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விரோத போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.
தனியாருக்கு இந்த ஆலையை தாரை வார்க்க கூடாது. அண்ணாவின் கனவு திட்டமாக சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை தடுத்து நிறுத்த, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும். தி.மு.க. எம்.பி.க்களும் அவருடன் சென்று வலியுறுத்த தயாராக இருக்கிறார்கள்.
அமைச்சர் எம்.சி.சம்பத்:- சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பது உங்கள் நிலைப்பாடு மட்டுமல்ல, எங்களின் நிலைப்பாடும் அது தான். இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம். முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பொதுப்பணிதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை தடுத்து நிறுத்த, நாம் அனைவரும் அனைத்து முயற்சிகளை எடுப்போம்.
அமைச்சர் தங்கமணி:- மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்க அன்றைய காங்கிரஸ் அரசு முன்வந்தது. அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர் ஜெயலலிதா. 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசே வாங்கியது.
மு.க.ஸ்டாலின்:- உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை, இதற்கு தி.மு.க. சார்பிலும் கடுமையாக கண்டனம் தெரிவித்தோம். அன்றைய பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தோம். அதற்காக தான் இப்போது சேலம் உருக்காலை தனியாருக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே சேலம் உருக்காலையை தனியாருக்கு ஒப்படைப்பதற்காக முயற்சி செய்தார்கள். அது இந்த அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. பல்வேறு வழிகளிலே முயற்சி செய்தார்கள். அந்த முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சொல்லி இருக்கின்றார், பத்திரிகையிலும் வந்திருக்கின்றது. தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக டெண்டர் விடுவதற்காக பத்திரிகை செய்தி வந்திருக்கின்றது.
ஆகவே, நீங்கள் சொல்லியதைப் போல எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சேர்ந்து முதற்கட்டமாக பிரதமரையும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரியையும் சந்தித்து, இதை கைவிட வேண்டும்; இது ஒரு முக்கியமான திட்டம்; பிரதான திட்டம்; ஆகவே, இது மாநிலத்திற்கு ஒரு பொதுத்துறையாக இருக்கின்ற காரணத்தினாலே, பொதுத்துறை இப்படி ஒவ்வொன்றாக எடுக்கின்ற போது மக்கள் மத்தியிலே ஒரு தவறான எண்ணம் ஏற்படும் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி, இன்னும் என்னென்ன சரத்துகள் இருக்கின்றதோ அதை எல்லாம் சேர்த்து, ஒரு மனுவாக, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரதமரையும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரியையும் சந்தித்து அழுத்தத்தை கொடுப்போம். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலே இரு அவைகளிலும் நாம் இந்த பிரச்சினையை எழுப்பி, இதை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான ஆக்கபூர்வமான திட்டத்திற்கு எங்களுடைய அரசும், அ.தி.மு.க.வும் முழு ஒத்துழைப்பு நல்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் கே.ஆர்.ராமசாமி, ‘காங்கிரஸ் கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்கும்’ என்றார்.
Related Tags :
Next Story