மாநிலங்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக முகமது ஜான், சந்திரசேகரன் அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக முகமது ஜான், சந்திரசேகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:12 PM IST (Updated: 6 July 2019 12:12 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக முகமது ஜான், சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகிய 5 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் 24 ந்தேதியுடன் நிறைவடைகிறது.

தி.மு.க.வை சேர்ந்த கனிமொழியின் பதவி காலமும் முடிவடைய இருந்த நிலையில் அவர் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனதால் தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதன் மூலம் மாநிலங்களவையில் காலியாக போகும் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த 6 இடங்களுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் வக்கீல் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  ம.தி.மு.க.வுக்கு  ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.  அதற்கு பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இந்த 3 வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலூரை சேர்ந்த முகமது ஜான்  மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன்  ஆகியோர் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

Next Story