நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்


நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு :  மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 6 July 2019 7:31 PM IST (Updated: 6 July 2019 7:31 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் விலக்கு கோரிய மசோதாக்களை நிராகரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை, மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

தமிழகத்தின் இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கிராமப்புற மாணவர் நலனை துச்சமென மதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

மசோதாவை நிராகரித்தது கூட்டாட்சி தத்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலிபுரியும் செயலாகும்.  மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை முதல்-அமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ கூறவில்லை.

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story