மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் :  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 July 2019 10:40 PM GMT (Updated: 6 July 2019 10:40 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

இந்தியாவின் தேர்தல் முறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும் நிலையில், அவற்றில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிகரிப்பது தான் முதன்மையான சீர்திருத்தமாகும். மக்களின் தேவைகள் அனைத்தையும் அவர்களின் பிரதிநிதிகள் அறிந்து, அவற்றை நிறைவேற்ற இந்த சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும்.

மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்று 1976-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்தது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் அது மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் என்பதால் தான் தொகுதிகளை அதிகரிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு மக்கள் தொகைப் பெருக்கம் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் பேருக்கும், மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 12 லட்சம் வாக்காளர்களுக்கும் மிகாமல் இருப்பதை தொகுதி மறுவரையறை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story