பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காதா? நிர்மலா சீதாராமன் பதில்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காதா? நிர்மலா சீதாராமன் பதில்
x
தினத்தந்தி 7 July 2019 5:23 AM IST (Updated: 7 July 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சென்னை, 

தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தந்தி டி.வி. சார்பில் சலீம் சிறப்பு நேர்காணல் நடத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட், தமிழக அரசியல், ரஜினியின் அரசியல் வருகை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இதுவரை பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட பட்ஜெட் புத்தகங்களை நீங்கள் துணிப்பையில் கொண்டுவந்தது ஏன்?

பதில்:- நான் பட்ஜெட் புத்தகத்தை கொண்டுவந்த துணிப்பை எங்கள் வீட்டில் கையால் நெய்யப்பட்டது. நாம் புனிதமாக கருதும் பொருட்களுக்கு எவ்வளவு மரியாதையும், அந்தஸ்தும் கொடுக்கிறோமோ அதை நம் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் பட்ஜெட்டுக்கும் கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால் கையால் நெய்யப்பட்ட சிவப்பு துணியில் மஞ்சள் நிறத்தில் அசோகச் சக்கரம் பொறித்து அதனுள் பட்ஜெட் புத்தகத்தை வைத்து நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தேன்.

கேள்வி:- நீங்கள் பட்ஜெட் வாசித்தபோது அவ்வப்போது மேஜையை தட்டியவாறு ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. பட்ஜெட் உரையை நீங்கள் வாசித்து முடித்தவுடன் என்ன சொன்னார்?

பதில்:- மிக நன்றாக வாசித்தீர்கள் என்று என்னை பாராட்டியதோடு நிற்காமல் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் 2 மணி நேரம் முழு உரையையும் வாசித்து முடித்துவிட்டீர்களே என்றும் சொன்னார். பிரதமரின் பாராட்டில் என் உரையை அவர் எவ்வளவு தூரம் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதும் எனக்கு தெரிந்தது.

கேள்வி:- ஒட்டுமொத்த வரவு என்ன? செலவு என்ன? கடன் எவ்வளவு? என்று சொல்லாமலேயே பட்ஜெட்டை வாசித்து முடித்துவிட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருக்கிறாரே?

பதில்:- பட்ஜெட்டில் இருக்கும் ஒட்டுமொத்த நுணுக்கங்களையும் உரையில் சொல்லிவிட முடியாது. எண்ணிக்கைகளை அடுக்குவது முக்கியமல்ல, அதே சமயத்தில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொன்றையும் உறுப்பினர்களுக்கு தெளிவாகவும், துல்லியமாகவும் புத்தகமாக கொடுத்துள்ளோம்.

கேள்வி:- பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்படைய மாட்டார்களா? இதை நீங்கள் மனதில் கொள்ளவில்லையா?

பதில்:- பெட்ரோல், டீசலை நாம் எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோமோ அந்த பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. ஏனென்றால் நாம் கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்கிறோம். பெட்ரோல், டீசலை நாம் உற்பத்தி செய்வதில்லை. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சுமைகளை பொதுமக்கள் மீது சுமத்தாமல் இருக்க பல தொலைநோக்கு திட்டங்களும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் சேவைகளை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொது போக்குவரத்துகளை நாம் பயன்படுத்த தொடங்கினால் பெட்ரோல், டீசல் விலையேற்றங்கள் நம்மை பாதிக்காது. கூடவே தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வர உதவியாக அவற்றுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த சிறப்பு நேர்காணல் இன்று இரவு 8 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. 

Next Story