இந்தி சொற்களை நீக்க வேண்டும்: அரசு பஸ்களில் தமிழ்மொழியை புறக்கணிப்பதா? வைகோ கண்டனம்


இந்தி சொற்களை நீக்க வேண்டும்: அரசு பஸ்களில் தமிழ்மொழியை புறக்கணிப்பதா? வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 8 July 2019 1:30 AM IST (Updated: 8 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

இந்தி சொற்களை நீக்க வேண்டும்: அரசு பஸ்களில் தமிழ்மொழியை புறக்கணிப்பதா? வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்குப் புதிதாக வாங்கப்பட்ட 500 பேருந்துகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்திருக்கிறார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் இப்புதிய பேருந்துகளில் அவசர வழி, இருப்பிடங்கள் உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டு உள்ளன. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்ற வேளையில், எடப்பாடி பழனிசாமி அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழக அரசின் புதிய பேருந்துகளில் தமிழையே புறக்கணிக்கின்ற அளவுக்கு இவர்களுக்கு துணிச்சல் எப்படி வந்தது. அண்ணாவின் பெயரை கட்சியில் கொண்டு உள்ள ஆட்சியாளர்கள் அண்ணாவின் கொள்கைக்கு துரோகம் இழைப்பதை ஒருபோதும் தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

புதிய பேருந்துகளில் உள்ள இந்திச் சொற்களை உடனடியாக நீக்கிவிட்டு, தமிழை இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story