மாநிலங்களவைக்கு திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். இந்த 2 கட்சிகளும், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிக்கு தலா ஒரு இடத்தை வழங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முகமது ஜானும், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. சார்பில் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகமும், வக்கீல் வில்சனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான வைகோவும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேநேரத்தில் வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவைக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியான நிலையில், வைகோ மனு ஏற்கப்படுமா? என்பது நாளை வேட்புமனு பரிசீலனையின் போது தெரியவரும்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார். வைகோ மனு நாளை நிராகரிக்கப்பட்டால் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த திமுக நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
2014ஆம் ஆண்டு அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் மக்களவைக்கு போட்டியிட்டவர் இளங்கோ.
Related Tags :
Next Story