கள்ளக்காதலியை கைவிட மறுத்த ஆசிரியர், பள்ளி முன்பு குத்திக்கொலை மைத்துனர் கைது


கள்ளக்காதலியை கைவிட மறுத்த ஆசிரியர், பள்ளி முன்பு குத்திக்கொலை மைத்துனர் கைது
x
தினத்தந்தி 9 July 2019 12:06 AM GMT (Updated: 9 July 2019 12:07 AM GMT)

கள்ளக்காதலியை கைவிட மறுத்த ஆசிரியரை, பள்ளி முன்பு குத்தி கொன்ற அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் செயல்படும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி கிரேசி (29). இவர்களுக்கு ரோசி ஏஞ்சல் (4) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மகளுடன் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி. தெருவில் வசிக்கும் தன்னுடைய தந்தை ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே, அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பிரியா (28) என்ற இளம்பெண்ணுடன் வடிவேல் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது. பிரியா தன்னுடைய கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்கிறார். இதையடுத்து வடிவேல் முருகனும், பிரியாவும் புதூரில் வாடகை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வடிவேல் முருகனை மீண்டும் மனைவி கிரேசியுடன் சேர்ந்து வாழுமாறு பலமுறை மனைவியின் குடும்பத்தினர் கூறி வந்தனர். ஆனால் வடிவேல் முருகன் அதனை கண்டுகொள்ளவில்லை.

நேற்று காலையில் வழக்கம்போல் வடிவேல் முருகன் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மதிய உணவு இடை வேளையில் சாப்பிட சென்று விட்டு, மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அப்போது கிரேசியின் தம்பி அற்புதசெல்வன் என்ற ஆஸ்டின் (26) அங்கு வந்தார். அவர் தனது செல்போனில், வடிவேல் முருகனை தொடர்பு கொண்டு நேரில் பேச விரும்புவதாகவும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே வருமாறும் கூறினார்.

உடனே பள்ளிக்கூடத்துக்கு வெளியே வடிவேல் முருகன் வந்தார். அப்போது அங்கு நின்ற அற்புதசெல்வன், வடிவேல் முருகனிடம் கள்ளக் காதலியை கைவிட்டு தன்னுடைய அக்காள் கிரேசியுடன் மீண்டும் சேர்ந்து வாழும்படி கூறினார். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அற்புதசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென்று வடிவேல் முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த வடிவேல் முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். சிறிதுநேரத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அற்புதசெல்வன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலையாளி அற்புதசெல்வன் அங்குள்ள மெயின் ரோடு வழியாக தப்பி ஓடியதாக அப்பகுதி மக்கள் கூறினர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அற்புதசெல்வனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த வாகன ஓட்டிகள்
ஆ சிரியர் வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். ஆனால் யாரும் வடிவேல் முருகனை காப்பாற்ற முன்வரவில்லை. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதிலும் அவரை காப்பாற்ற முன்வராமல் வாகன ஓட்டிகள் படம் எடுத்த சம்பவம் மனிதநேயம் குறைந்து வருகிறதோ என்ற உணர்வை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Next Story