நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2019 12:24 AM GMT (Updated: 9 July 2019 12:24 AM GMT)

நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த பிரச்சினையில் சட்ட நிபுணர்களுடன் கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படக்கூடிய நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவிலக்கு அளிக்க வேண்டுமென்று இதே சட்டமன்றத்தில் கடந்த 01-02-2017 அன்று 2 மசோதாக்கள் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக ஒருமித்தக் கருத்தோடு நிறைவேற்றப்பட்டு அந்த இரு மசோதாக்களை நாம் அனுப்பிவைத்தோம். நாம் எல்லோரும் நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்று தாருங்கள் என்று மத்திய அரசை சட்டமன்றம் மூலமாகவும், ஏன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மூலமாகவும் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் எல்லாம் மவுனம் சாதித்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு இப்பொழுது திடீரென்று ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் தமிழக நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்ற ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. எனவே இது தமிழகத்தை ஒரு மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

மசோதாக்கள் நிராகரித்தது குறித்த தகவலைக்கூட மாநில சட்டமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கண்ணியம் கூட காணாமல் போயிருக்கிறது. கூட்டுறவு கூட்டாட்சி என்று சொல்லிக்கொண்டே, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவமும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது. அரசமைப்பு சட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய அநீதி என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். எனவே, அரசியல் சட்டமைப்பு சட்டப்படி சட்டமன்றத்திற்கு இறையாண்மை அடிப்படையில் அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய சட்டம் இயற்றும் முக்கியமான அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே மாநில மக்கள் மன்றமாக விளங்கிக்கொண்டு இருக்கக்கூடிய இந்த சட்டமன்றத்தின் ஆணிவேர் இன்றைக்கு மாய்க்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசின் இந்த வினோதமான செயல் மிக மிக கண்டனத்திற்கு உரியது என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்கின்றேன். எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடிய மசோதாக்கள் இரண்டிற்கும் உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி இந்த அவையில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவமானம் செய்திருக்கக்கூடிய மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டுவந்து இந்த அவையில் ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும்.

மேலும், மக்களுடைய நலம் பேணவும் இந்த மாநிலத்தின் உணர்வை மதிக்கவும், அவர்களுடைய விருப்பத்தை எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் சட்டமன்றத்திற்கு இருக்கக்கூடிய இறையாண்மையை பாதுகாத்திட சட்டப்பூர்வமான மாமருந்து தேடி தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இது குறித்த கண்டன தீர்மானத்தை இந்த அரசு உடனடியாக கொண்டு வரவேண்டும்.

(இதே கருத்தை சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் பேசினார்.)

அமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகத்தில் முதலில் பிளஸ்-2 தேர்வுக்கு பிறகு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறை இருந்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் அதனை ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க செய்தார். மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தான் நீட் கொண்டுவரப்பட்டது.

ஜெயலலிதா தொடர்ந்து போராடினார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் நல்ல தீர்ப்பும் கிடைத்தும், காங்கிரஸ் மறு சீராய்வு மனு போட்டு, தமிழகத்திற்கு தடை போட்டது. இந்த வரலாறை மறைக்க முடியுமா? இங்கே இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு நீட்டை பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. கடந்த ஆண்டு நீட் விலக்குக்கோரி கடைசி கட்டம் வரை தமிழக அரசு போராடியது. ஆனால் உங்களுடைய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தமிழகத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- இங்கு நான் பதிவு செய்ய விரும்புவது காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது நீங்கள் தான் கூட்டணியில் இருந்தீர்கள் என்று பேசினீர்கள். தி.மு.க. இருந்தவரையில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் தி.மு.க. ஆட்சி இருந்த வரையில் நீட் என்ற பிரச்சினை தமிழ்நாட்டில் நுழைய முடியாத அளவிற்கு கருணாநிதி பார்த்துக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தீர்கள் என்பதை பதிவு செய்ததைப் போல எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் என்பதை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்றைக்கு பிரதமராக வந்ததற்குப் பிறகு அவரே இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கின்றார். இதையும் நீங்கள் பார்க்க வேண்டும். எனவே இன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக இதனை கண்டிக்கின்ற வகையில் ஒரு தீர்மானத்தை இந்த அவையில் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய நிலையை இந்த அரசு உருவாக்கிட வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- மோடி எதிர்த்தார் என்கிறீர்கள். இதை யார் கொண்டு வந்தது?. தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களும் நீட்டை ஏற்றுக்கொண்ட சூழ்நிலையில் தமிழக அரசு கடைசி வரை போராடிக்கொண்டு இருக்கிறது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- நீட் தேர்வு குறித்து அமைச்சர் சரியான பதிலை தந்து கொண்டிருக்கிறார். கண்டன தீர்மானம் போட முடியாது. அது சரியாக இருக்காது. எனவே சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, நல்ல முடிவை எடுப்போம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- கோர்ட்டில் நிராகரித்து இருக்கிறார்கள், அவர்கள் சொன்னதற்கு நிறுத்தி வைப்பு என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்.

மு.க.ஸ்டாலின்:- மத்திய அரசைக் கண்டித்து கண்டன தீர்மானம் போட முடியாது என்பதை அவை முன்னிறுத்தி சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். வற்புறுத்தியாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, ஆலோசித்து இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- நீங்கள் எங்களுடைய தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை. விரும்பாத மாநிலங்களில் நீட்டை திணிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறோம்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- திராவிட கட்சிகள் நாங்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். நீங்களே கொண்டுவந்தீர்கள் (நீட்), நீங்களே நீக்குவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இது தான் நாடகம். இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

(இதைத்தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்).

Next Story