மாநில செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு + "||" + About 10 percent reservation Conclusion with legal professionals O. Pannirselvam Announcement

10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை,

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அதில் என்னென்ன பிரச்சினைகள் எழக்கூடும் என்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.


இதில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, உ.பலராமன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா வகுத்துதந்த வழிமுறையின்படி தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கட்டிக்காத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஏதுவாக சட்ட திருத்தங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அரசிதழில் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒருவரின் வருடாந்திர குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளதின் அடிப்படையிலும், அவருடைய குடும்பத்தின் சொத்துகளின் அடிப்படையிலும் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்வியில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் கிடைக்கும். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு 850 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் 586 இடங்கள் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு மாறாகவே, ஓர் அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து ‘பொருளாதார ரீதியாக’ என்று ஒரு புதிய பிரிவு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘பொருளாதாரப் பிரிவு’ இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப்போகச் செய்துவிடும். இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்துவிடக்கூடாது.

முன்னேறிய சமுதாயத்துக்கு 10 சதவீத இடஒதுக் கீட்டை மருத்துவ கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 25 சதவீத இடங்களை அதிகரிக்கிறோம் என்பதை நம்பி திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம்.

தமிழ்நாட்டில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கும் அளவுக்கு முன்னேறிய வகுப்பினர் அதிக சதவீதம் இல்லை. ஆகவே நம் மாநிலத்துக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு பொருந்தாது. இந்த இட ஒதுக்கீடு மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நம் மாநிலத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டை அடியோடு ரத்து செய்யும் உள்நோக்கத்துடன் தான் இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகவே ‘முன்னேறியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறோம்’ என்று கூறப்படுவதற்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. திராவிட இயக்கத்தின் மூலாதாரமான சமூகநீதியை நிலைநாட்ட இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உணர்வுப்பூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் ஆதரவும், தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எஞ்சிய 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

கூட்டம் முடிந்ததும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் நல்ல பல கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், சமூக நீதியை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதாவின் கொள்கையின்படி உரிய நல்ல முடிவை அரசு எடுக்கும்.

ஜெயலலிதாவை பொறுத்தவரை திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியாக 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற செய்து ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார். அந்தநிலையில் சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், ஜெயலலிதாவின் சமூகநீதியை காப்பாற்றுவதற்காகவும், அவரின் கொள்கை முடிவின்படியும் தமிழக அரசின் முடிவு இருக்க வேண்டும் என்பதின் அடிப்படையில் தான் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

அந்த அடிப்படையில் மீண்டும் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.