ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்


ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
x
தினத்தந்தி 10 July 2019 3:15 AM IST (Updated: 10 July 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தீர்ப்பை விரைவில் தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று முற்பகல் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 13 சட்டக்கல்லூரிகள் உள்ளன. விழுப்புரத்தில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக சட்டக்கல்லூரி கட்டும் பணி முடியவடையும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கப்படும். இதேபோல், தர்மபுரி, ராமநாதபுரத்திலும் சட்டக்கல்லூரிகள் கட்டி திறக்கப்பட உள்ளன. சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டு அமர்வு அதற்கு அனுமதியளிக்க வேண்டும். அனுமதி தருவார்கள் என்று நம்புகிறோம்.

அதேபோல், ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்து தர தமிழக அரசு விரைவில் கேட்கும். நீதிமன்ற கட்டிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 88 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. விரைவில் 100 சதவீதம் அளவுக்கு நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கும்.

தாலுகா நீதிமன்றங்கள் 51 தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீதிபதிகள் இல்லாததால் அவைகள் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் பயிற்சி முடிந்ததும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த கோர்ட்டுகள் முன்சீப், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளாகவும் செயல்படும்.

நீதிமன்றங்கள் கணினி மயமாக்கும் பணிக்காக அரசு ரூ.47 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுவரை ஆவணங்களின் 1 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அதில், 25 லட்சம் பக்கங்கள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை என 117 நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் முழுமையாக பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story