ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நடப்பாண்டில் ரூ.1,200 கோடி நிதியில் 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஊரக பகுதிகளில் ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை,
நடப்பாண்டில் ரூ.1,200 கோடி நிதியில் 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஊரக பகுதிகளில் ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக சாலைகள்
2015-2016-ம் ஆண்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தினார். இதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2018-2019-ம் ஆண்டில் 1,200 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், 5,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
கஜா புயலினால் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்களுக்கு அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்திற்குட்பட்ட சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில் மறுசீரமைப்புப் பணிகள் 200 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
10 ஆயிரம் தடுப்பணைகள்
பழுதடைந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார் சாலைகளை வலுப்படுத்தவும், தார் இடப்படாத சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தவும், நடப்பு ஆண்டில் 255 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஊரகப் பகுதிகளில், குடியிருப்புகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் தடுத்திடவும், நீர் வடிக்கப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், தனிநபர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கவும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவு நீர் வடிகால்களைச் சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழிகள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.
கிராமப் புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
ரூ.12 ஆயிரம் கோடி வங்கி கடன்
ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறித்த நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில் போதுமான கடன் கிடைக்க வழிவகை செய்ய கடந்த 2018-2019-ம் ஆண்டு பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற இலக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கினையும் விஞ்சி 11 ஆயிரத்து 449 கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டம், நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நடப்பாண்டு முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 210.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். இவ்வாண்டு இத்திட்டத்திற்கு 40.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார அளவில் மேம்படுத்தப்பட்ட வலுவான கூட்டமைப்பை உருவாக்குதல், இணையவழி நிதி பரிமாற்றம், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத பிரிவுகளில் தனிநபர் மற்றும் கூட்டு தொழிலுக்கான வணிக மேம்பாட்டினை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கிராம மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக, நடப்பு ஆண்டில் 125 கோடி ரூபாய் செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகிய இரண்டு மண்டல ஊரக வங்கிகள் 1.4.2019 அன்று ஒருங்கிணைந்து, மாநிலம் முழுவதும் 630 கிளைகளைக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் சேலத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.
இதற்கென தமிழ்நாடு கிராம வங்கியும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் ஒருங்கிணைந்த ஒரு வளாகம் அமைக்க சேலத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்படும். இவ்வளாகம், வாழ்க்கைத் தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரு மையமாக செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story