நீட் தேர்வு மசோதா விவகாரம்: மு.க.ஸ்டாலின்-அமைச்சர்கள் காரசார விவாதம் சட்டசபையில் இருந்து தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு


நீட் தேர்வு மசோதா விவகாரம்: மு.க.ஸ்டாலின்-அமைச்சர்கள் காரசார விவாதம் சட்டசபையில் இருந்து தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 July 2019 3:00 AM IST (Updated: 11 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மு.க.ஸ்டாலின்-அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.

சென்னை, 

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மு.க.ஸ்டாலின்-அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அவையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ராஜினாமா செய்ய வேண்டும்

மு.க.ஸ்டாலின்:- நீட் தேர்வு தொடர்பாக இதே அவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாக்கள் கடந்த 22.9.2017 அன்று நிராகரிக்கப்பட்டதாக சட்டத்துறை செயலாளருக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் இதனை தமிழக அரசும், சட்டத்துறை அமைச்சரும் மறைத்து இருக்கிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விவாதத்திலும் இந்த உண்மையை மறைத்து அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். 19 மாதம் ஆகியும் இந்த கடிதம் குறித்து, சட்டசபையிலும், மக்களிடமும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி மீண்டும் அந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இது மக்களுக்கு, மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

உங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூட நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படும் என்று தெரிவித்துள்ளர்கள். இதனால் மக்களையும் ஏமாற்றி உள்ளர்கள். நாட்டு மக்களுக்கு இந்த அரசு பச்சை துரோகம் செய்துள்ளது. எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

நீங்கள் தயாரா?

அமைச்சர் சி.வி.சண்முகம்:- நீட் தேர்வு தொடர்பாக 22.9.2017 அன்று ஜனாதிபதியிடம் இருந்து வந்த கடிதத்தில் மசோதா நிறுத்தி (வித் ஹெல்ட்) வைக்கப்பட்டிருப்பதாக தான் குறிப்பிடப்பட்டிருந்தது. நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே அவையில் தெளிவாக குறிப்பிட்டேன். 2 மசோதாக்களும் எதற்காக, என்ன காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தமிழக அரசின் இந்த கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளித்து எந்த கடிதமும் வரவில்லை.

ஆகவே இந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டில் ஒரு இ-மெயிலை காட்டி மத்திய அரசின் வக்கீல் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இ-மெயில் தொடர்பான கடிதம் கூட இந்த நேரம் வரை தமிழக அரசுக்கு வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எந்த சட்ட வல்லுனரையும் இது குறித்து கலந்து ஆலோசித்து கொள்ளலாம். ஆகவே நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதுபோன்று நீங்கள் (மு.க.ஸ்டாலின்) ராஜினாமா செய்ய தயாரா?.

(இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் குறிப்பிட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.)

தி.மு.க. வெளிநடப்பு

மு.க.ஸ்டாலின்:-அமைச்சர் இந்த விஷயத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். நான் கேட்க விரும்புவது, இந்த கடிதம் 2017-ம் ஆண்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மாணவர்களின் பிரச்சினை. எனவே அமைச்சர் ஏட்டிக்கு போட்டியாக பேசுவது சரியில்லை. இது பொறுப்பற்ற செயல்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- மசோதா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தால், அதனை அவையில் தெரிவித்திருப்போம். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தான் கடிதம் வந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும், நிராகரிக்கப்பட்டதற்கு வித்தியாசம் உள்ளது. எனவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- அமைச்சர் சி.வி.சண்முகம் மிகச்சரியாக கூறினார். 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியதும், நான் இதுதொடர்பாக பேசியிருப்பதும், சட்டசபை குறிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே இதுபோன்ற செயலில் எதிர்க்கட்சி தலைவர் ஈடுபடுகிறார். (சட்டசபையில் நடந்த விவாதம் தொடர்பாக பேரவை குறிப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வாசித்துக் காட்டினார்)

மு.க.ஸ்டாலின்:-அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளதக்க வகையில் இல்லாததால் இதனை கண்டிக்கும் வகையில் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் தான் காரணம்

இந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- காங்கிரஸ் ஆட்சியில் நீட் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது தான் இதற்கு காரணம்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- செய்த பாவத்திற்கு நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-நீட் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அறிவிப்பாணை தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது. இது தொடர்பான எல்லா விஷயங்களும் ஆவணமாக உள்ளது. இதையெல்லாம் யாராலும் மறுக்க முடியாது.

இதைத்தொடர்ந்து பேசிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி அமைச்சர்கள் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- யார்- யாரெல்லாம் வழக்கு போட்டு, யார், யார் ஜாமீன் வாங்கியிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வுக்கு வருவதற்கு நீங்கள் தான் காரணம். இவ்வளவு பிரச்சினைக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். இதுவும் மக்களுக்கு தெரியும்.

நளினி சிதம்பரம்

அமைச்சர் விஜயபாஸ்கர்:- காங்கிரஸ் கட்சி தலைவர் பதட்டமோ, டென்ஷனோ அடைய வேண்டாம். இந்த விஷயத்தை பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். நீட் தேர்வு தொடர்பாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த விவகாரம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு காங்கிரஸ் தான் என குற்றஞ்சாட்டுகிறேன். அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி, வேலை வழங்கியது எங்களது அரசு தான். நீட் தேர்வை எதிர்த்து எங்களுடன் அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீட் தேர்வு வழக்கில் ஆஜரான நளினி சிதம்பரம், இனி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பேட்டி அளித்தார். அனிதா மரணத்திற்கு காரணம் நீங்கள் தான்.

(அமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களை பேச அனுமதிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.)

கனவு பலிக்காது

அமைச்சர் சி.வி.சண்முகம்:- நீட் தேர்வு தொடர்பாக என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நான் தவறு செய்து இருந்தால், அதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன். இந்த சபையில் 8.7.2019 அன்று நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் இது பற்றி தெளிவாக பேசியிருக்கிறேன். இது அவைக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது. (அவர் பேசியதை படித்து காட்டினார்) ஆகவே எதிர்க்கட்சி தலைவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. 5 ஆண்டு இந்த ஆட்சி முழுமை அடையும். அடுத்தும் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும். எதிர்க்கட்சி தலைவர் என்ன தண்ணீர் குடித்தாலும், கனவு கண்டாலும் அது பலிக்காது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story