‘தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை’ சட்டசபையில் அமைச்சர் புது தகவல்
தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்று சட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம் தொகுதி) பேசினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தரத்தில் குறை இருக்கிறதா?
உறுப்பினர் சேகர்பாபு:- செயல் திட்ட புத்தகத்தில் 2016-ம் ஆண்டு 1,067 தையல் எந்திரம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2018-2019-ம் ஆண்டு 2,976 தையல் எந்திரம் வாங்குவதற்கும் அதே தொகையான ரூ.1 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தையல் எந்திரத்தின் எண்ணிக்கை கூடும்போது விலையும் கூடும் அல்லவா?. எனவே, விலையில் தவறு இருக்கிறதா? அல்லது தரத்தில் குறை இருக்கிறதா?.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதற்காக 9.55 ஏக்கர் நிலப்பரப்பில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையமும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த மையம் மூடிக்கிடக்கிறது.
விலையில்லா அரிசி
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அந்த மையத்தில் பிச்சைக்காரர்களை அடைத்து வைத்தால் சுவர் ஏறிக்குதித்து சென்றுவிடுவார்கள்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டதே அதற்காகத்தான்.
அமைச்சர் பி.தங்கமணி:- தையல் எந்திரம் வாங்கியதில் விலை வித்தியாசம் வருவதாக உறுப்பினர் தெரிவித்தார். அது வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகை. செலவு செய்யப்படும் தொகை பின்னர்தான் தெரியவரும்.
பிச்சைக்காரர்கள் யார்?
அமைச்சர் சரோஜா:- பிச்சைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் சொல்கிறார். தெரு ஓரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கிடையாது. கையேந்துபவர்கள் தான் பிச்சைக்காரர்கள். அவர்களை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களும் விசாரணையில் ஒத்துக்கொண்டு, மறுவாழ்வு மையத்துக்கு வர சம்மதித்தால் மட்டுமே இங்கு அழைத்து வர முடியும். அப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை. அவர்களின் மறுவாழ்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை என்ன செய்வது என்று அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.
உறுப்பினர் சேகர்பாபு:- உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.
(அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அப்போது நீங்கள் கோர்ட்டுக்கு செல்வீர்களா? என்று கேட்டார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்)
அடையாள அட்டை
உறுப்பினர் சேகர்பாபு:- 7 வகையான உடல் குறைபாடு உள்ளவர்கள் தான் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ளனர். 21 வகையான அங்க குறைபாடு உள்ளவர்களையும் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்தால், தமிழகத்தில் 30 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் வருவார்கள். அவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கும்.
அமைச்சர் சரோஜா:- தமிழ்நாட்டில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தற்போது, மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேகர்பாபு:- மாற்றுத்திறனாளி நிதியம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, அது பயன்படுத்தப்படாமல் அப்படியே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
நலவாரிய கூட்டம்
அமைச்சர் சரோஜா:- அதற்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழு இந்த நிதியை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் உரிய பயனாளிகளுக்கு சிந்தாமல் சிதறாமல் வழங்கப்படும்.
உறுப்பினர் சேகர்பாபு:- மாற்றுத்திறனாளிகள் நலவாரிய கூட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை.
அமைச்சர் சரோஜா:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கூட்ட முடியவில்லை. வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய கூட்டம் கூட்டப்படும்.
உறுப்பினர் சேகர்பாபு:- தேர்தல் நடத்தை விதிமுறை 2 ஆண்டுகளா இருந்தது?. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் திட்ட கண்காணிப்பு குழு கூட்டமும் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை.
தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை:- பெண் அமைச்சரை பதில் சொல்லவிடுங்கள். மற்ற அமைச்சர்களே பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அதனால் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். உங்களது (தி.மு.க.) ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story