சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது.
சென்னை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 13 மில்லி மீட்டர் மழை பெய்தது.
ஏரிகள் வறண்டன
பருவ மழை கடந்த 2 ஆண்டுகளாக முறையாக பெய்யாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் போதிய தண்ணீர் நிரப்ப முடியாமல் போனது. அதேநேரம் ஆந்திர மாநிலத்திலும் போதிய மழை இல்லாததால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியில் 17 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாநகர பகுதிகளுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மிதமான மழை
இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்து உள்ளது. சோழவரம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 3 மில்லி மீட்டர், புழல் 12 மி.மீ., செம்பரம்பாக்கம் 10 மி.மீ. மற்றும் கொரட்டூர் அணைக்கட்டு பகுதிகளில் 3 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 13 மி.மீ., என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.
நிலத்தடி நீர் மட்டம்
தற்போது பெய்து இருக்கும் மழையால் ஏரிகளில் நீர் மட்டம் எதுவும் உயரவில்லை. ஏரிகளில் மாதக்கணக்கில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் தற்போது பெய்யும் மழை தண்ணீர் பூமிக்கடியில் இறங்கி விடுகிறது. அதேபோல் நிலத்தடி நீர் மட்டமும் எதிர்பார்த்த அளவு உயருவதற்கு வாய்ப்பு இல்லை. தொடர்ந்து நல்ல மழை பெய்தால் மட்டுமே ஏரிகளில் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயருவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story