பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை விதிப்பு
‘பிளாஸ்டிக்’ பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து பாலிப்ரொப்பிலீன் பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல பிளாஸ்டிக் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன.
அந்த மனுக்களில், 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவினால், எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று கூறப்பட்டு இருந்தது.
ஆவின் பால்
இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தமிழகம் முழுவதும் அரசு விற்பனை செய்யும் ஆவின் பால், பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து தான் விற்பனை செய்யப்படுகின்றது. தினமும் ஏராளமான பால் பாக்கெட்டுகள் பொதுமக்களால் வாங்கப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பொது இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.
அத்தியாவசிய பொருட்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். ‘பால், மருந்து, எண்ணெய் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால், அதற்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.
அதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது என்று மனுதாரர்கள் கூறுவது எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என்று வாதிட்டார்.
ஏற்க முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் இந்த தடை உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ ஏற்க முடியாது.
முதலில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சுத்தமான குடிநீர், மாசுஇல்லாத காற்று கிடைக்கவேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. பால், மருந்து, எண்ணெய் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால், அவற்றை மட்டும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கருத்தை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற கருத்தை அரசு எப்போதும் சொல்லக்கூடாது.
‘பாட்டில்’ பால்
அத்தியாவசிய பொருட் களை தடை செய்ய சொல்லவில்லை. அவற்றை அடைக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தான் முழுமையாக தடை செய்யவேண்டும். எனவே, இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் நோக்கம் நூறு சதவீதம் நிறைவேறும்.
தமிழகம் அரசு ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யவேண்டும். அல்லது வேறு வழிகளை கண்டறியவேண்டும்.
பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அரசு அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் சந்தையில் எளிதாக கிடைத்தால், தமிழக அரசின் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாகவே இருக் கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தடை உத்தரவே அர்த்தமற்றதாகி விடும்.
கால்நடைகள் பலி
அறிவியல் ஆய்வுகளின் படி பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. அந்த பிளாஸ்டிக் பைகளை மாடுகள் போன்ற கால்நடைகள் சாப்பிடுவதால், அவை பலியாகுகின்றன.
எனவே, இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்கிற பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து விட்டு, துணி, சணல் போன்ற பொருட்களால் ஆன பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
உத்தரவு செல்லும்
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அபாயகரமாக இருந்ததால் தான், மாநில அரசும், இயற்கை ஆர்வலர்களும் விழித்துக்கொண்டனர். அதன் விளைவாக இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது சரிதான். அந்த தடை உத்தரவு செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story