இன்று தொடங்க இருந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கிற்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கவுன்சிலிங்கிற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடத்துவது குறித்து கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணைக்கும், மாநில தொடக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை களையாமல் கவுன்சில் நடத்தக்கூடாது. இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்குவது, இடமாறுதல் மற்றும் பணி நிறவல் ஆகியவைகளுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
கவுன்சிலிங் தடை
இந்த வழக்குகளை நீதிபதி வி.பார்த்திபன் நேற்று விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் நளினி, வக்கீல் நீலகண்டன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, ‘ஆசிரியர்கள் கவுன்சிலிங் தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர், தொடக் கல்வி இயக்குனர் ஆகியோரது உத்தரவுகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனவே, இதன்படி கவுன்சிலிங் நடத்த அனுமதித்தால் குழப்பம் ஏற்படும். தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த குளறுபடிகள் களையவேண்டும். அதுவரை ஆசிரியர்கள் கவுன்சிலிங் தொடர்பாக கடந்த ஜூன் 20-ந்தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அனைத்து வகையான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story