ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 அதிகரிப்பு: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு பெண்கள் அதிர்ச்சி
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, வரலாறு காணாத உயர்வை தொட்டு இருக்கிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 270-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 330-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரலாறு காணாத உயர்வு
ஏற்கனவே கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.26 ஆயிரத்து 424 என்ற நிலைக்கு சென்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று தங்கம் வரலாறு காணாத உயர்வை அடைந்து இருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் என்ன?
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 41 ரூபாய் 30 காசுக் கும், கிலோ ரூ.41 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் நடந்த பெடரல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வைப்பு நிதி வட்டிவிகிதம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story