இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2019 4:45 AM IST (Updated: 12 July 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீடிக்கப்படுவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச வண்ண சீருடை

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயில வருகை புரியும் குழந்தைகளுக்கு இரண்டு இணை இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள, அங்கன்வாடி மையங்களுக்கு, 6.51 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும். நடப்பாண்டில் 1,133 அங்கன்வாடி மையக் கட்டிடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 22.66 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்

ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.3 ஆயிரம் ரூபாய் வீதம் 38,489 அங்கன்வாடி மையங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு நிதி சுமார் 11.55 கோடி ரூபாய் வழங்கப்படும். 10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலி, இரும்பு அலமாரி, நீர்வடிகலன் போன்ற அறைகலன்கள் 10.59 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

காய்கறி தோட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் உபாதைகள், காய்ச்சல், பேதி, காயம், தோல்தொற்று ஆகியவற்றை சமாளிக்கும் வகையில், எளிதாக பயன்படுத்தக்கூடிய மருத்துவ பொருள் அடங்கிய மருத்துவப் பெட்டியும், கைத்துண்டு, சீப்பு, நகவெட்டி மற்றும் சோப்பு அடங்கிய சுகாதாரப் பெட்டியும், 31 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பாண்டில் 7.35 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

நடப்பு ஆண்டில் 5,970 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் சுமார் 8.63 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த ஏதுவாக தோட்டக் கலைத் துறையின் உதவியுடன் காய்கறித் தோட்டம் அமைக்க, முதற்கட்டமாக ஒரு சத்துணவு மையத்திற்கு 5,000 ரூபாய் வீதம், 9,915 சத்துணவு மையங்களில் சுமார் 4.96 கோடி ரூபாய் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும்.

குழந்தைகள் இல்லம்

வறுமையாலும், பல்வேறு கடினமான சூழ்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து பராமரிப்பதற்கு, அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லம் ராமநாதபுரம் நகரத்தில் 70 பெண் குழந்தைகளுடன், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த இல்லத்திற்கு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட புதிய கட்டிடம் 1,614 சதுர மீட்டர் பரப்பளவில் 5.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சென்னை, கெல்லீஸில், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட கூடுதல் கட்டிடங்கள், 4.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

8 மாவட்டங்களில் இளைஞர் நீதிக்குழுமங்கள் கூர்நோக்கு இல்லங்களுடன் இணைக்கப்பட்டு, கூர்நோக்கு இல்ல சிறார்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது எஞ்சியுள்ள தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள 6 அரசு கூர்நோக்கு இல்லங்களை, அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களிலுள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடனும் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் நிறுவனம் மூலம் 2.6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

ஆயிரம் ரூபாய் நிதியுதவி

மன வளர்ச்சி குன்றியோர், கடுமையாக தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதிக உதவி தேவைப்படும் 800 மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு, மாதாந்திர பராமரிப்புத் தொகையுடன் கூடுதலாக 1,000 ரூபாய் உதவித்தொகை நடப்பு நிதியாண்டில் 96 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் 4 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது, கூடுதலாக 10 மாவட்டங்களில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையங்கள் 2.65 கோடி ரூபாய் செலவில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும். இதன் மூலம், 250 தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.

மாற்று திறனாளிகளுக்கு...

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மானியத்துடன் கூடிய பல்வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2018-2019-ம் நிதியாண்டில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, 100 மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய முன்பணத்தொகை 25,000 ரூபாயை தமிழ்நாடு அரசே செலுத்திடும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் மாற்றுத் திறனாளிகளிடம் அதிக வரவேற்பு பெற்றதால், ஆவின் நிறுவனத்திற்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய முன்பணத்தொகை 25,000 ரூபாய் உடன், ஆவின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளுக்கு மானியமாக 25,000 ரூபாய் என மொத்தம் ஒரு பயனாளிக்கு 50,000 ரூபாய் வீதம் 200 பயனாளிகள் பயனடையும் வகையில் நடப்பாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story