ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா காவிரி இறுதி தீர்ப்புக்கு ஊறு விளைவித்து விடக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா காவிரி இறுதி தீர்ப்புக்கு ஊறு விளைவித்து விடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு என்ற முகவுரையுடன், ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள செயல், சுப்ரீம் கோர்ட்டால் இறுதி செய்யப்பட்டுள்ள காவிரி இறுதி தீர்ப்பிற்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது என்று எச்சரித்திட கடமைப் பட்டிருக்கிறேன்.
நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதை எதிர்த்தன. ஆனால் விடாப்பிடியாக அதே மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த மசோதாவில், நடைமுறையில் உள்ள நதிநீர் நடுவர் மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படும் என்றும், அந்த நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் தாவாக்கள் புதிதாக உருவாக்கப்படும், தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தயங்கும் மத்திய அரசு
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தில், நடுவர் மன்ற தீர்ப்புகளை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவேண்டும் என்று இருந்த விதி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்போது புதிதாக தாக்கல் செய்யப்படும் மசோதாவிலும் அது மாதிரி இருந்தால் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எழுவது தவிர்க்க முடியாதது.
மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையே மதித்து கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதை தட்டிக்கேட்கவும் இயலாமல் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக தயங்கி நிற்கிறது. அப்படி இருக்கையில் நடுவர் மன்ற தீர்ப்பே அரசிதழில் வெளியிடவேண்டிய அவசியமே இல்லை என்பது எந்த விதத்திலும் நதிநீர் பிரச்சினையை தீர்க்கவும் உதவாது. தண்ணீர் கிடைக்கவும் பயன்படாது என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏனோ உணரத் தவறியிருப்பது வேதனையளிக்கிறது.
சரியானதுதானா?
ஆகவே ஒரே நதிநீர் தீர்ப்பாயம் என்ற போர்வையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், அந்த தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கலைத்து உருக்குலைப்பதற்கு ஒரு கருவியாக மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி விடக்கூடாது. அப்படி ஒரு கருவியாக பயன்படுத்தாது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதா தாக்கலாகும் போது எச்சரிக்கையாக இருந்து, தங்களது கருத்துகளை ஆணித்தரமாக உறுதியுடன் எடுத்து வைப்பார்கள்.
அதேவேளையில் தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டு ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்த விதத்திலும் ஊறுவிளைவித்து விடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து, அதற்கான உறுதிமொழியை மசோதா நிறைவேறும் முன்பு மத்திய அரசிடம் பெறவேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்சார வினியோகம், ஒரே நதிநீர் தீர்ப்பாயம் என்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக சொல்லிக்கொண்டு அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சி சரியானதுதானா? என சற்று எண்ணி பார்க்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாவலர் நெடுஞ்செழியன்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் சமூக நீதி லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பெரியாரின் பகுத்தறிவுத் தெளிவுடனும், அண்ணாவின் தமிழ் மொழிப் பற்றுடனும், கருணாநிதியுடனான இயக்க உறவுடனும் தொடர்ந்து பயணித்தவரான நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தேன் என இனிக்கின்ற செய்தியாகும். திராவிடர் கழகத்திலிருந்து, இரட்டைக் குழல் துப்பாக்கியாக உருவான தி.மு.க.வின் தொடக்கத்திலும், அதன் வளர்ச்சியிலும், அண்ணாவுக்கு உற்ற துணையாகவும் உறுதியான நம்பிக்கையாகவும் விளங்கியவர் நெடுஞ்செழியன்.
1967-ல் இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. முதன் முறையாக ஆட்சி அமைத்தபோது, அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடம் பெற்றவர் நாவலர்.
கருணாநிதி அமைச்சரவையில் இரண்டாம் இடம் கொண்ட அமைச்சராக, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட கருணாநிதியின் மகத்தான சாதனைகளில் துணை நின்ற தோழராக நாவலர் இருந்ததை மறக்க முடியாது. திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும், தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நாவலரின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவுகூருவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story