தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறதா? சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. காரசார விவாதம்


தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறதா? சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. காரசார விவாதம்
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

தொழில் துறை முதலீடுகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறதா? என்று சட்டசபையில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தை தொடங்கி வைத்து தி.மு.க. உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

முதலீடுகளை பெற முடியவில்லை

உறுப்பினர் ராமச்சந்திரன்:- சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாம் கிராமங்கள் தோறும் செல்லும்போது, அங்குள்ள பெரியவர்கள் நம்மை வந்து சந்திப்பார்கள். ஆனால், ஊருக்கு ஊர் தனியாக 50 இளைஞர்கள் நம்மைவிட்டு தள்ளியே இருப்பார்கள். அவர்களிடம் வலியப்போய் நாமே பேசினால், நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் என்கிறார்கள். எனவே, தொழில் துறை மூலம் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது நிறைய தொழிற்சாலைகள் வந்தன. மோட்டோரோலா, டெல், சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்தன. ஆனால், உங்கள் (அ.தி.மு.க.) ஆட்சியில் பெரிய தொழில் நிறுவனங்களை கொண்டுவர முடியவில்லை.

இன்றைக்கு பொருளாதார மந்த சூழ்நிலையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை பெற முடியவில்லை. மராட்டியத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடியும், குஜராத்தில் ரூ.41 ஆயிரம் கோடியும், ஆந்திராவில் ரூ.25,990 கோடியும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.8,300 கோடி தான் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

அமைச்சர் எம்.சி.சம்பத்:- 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டம்-2023-ஐ கொண்டுவந்தார். அதன்பிறகு புதிய தொழில் கொள்கைகள் வந்ததால், 37,220 தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்தன. தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. 2011-ம் ஆண்டு 22,900 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு வந்தது. 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பெரிய அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளது.

அமைச்சர் பென்ஜமின்:- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 503 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதிக்காக..

உறுப்பினர் ராமச்சந்திரன்:- அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் கியா மோட்டார்ஸ், அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளன. நமது மாநிலத்தில் இருந்து அந்த நிறுவனங்கள் சென்றது ஏன்?.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் தொடங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கியா மோட்டார்ஸ் என்பது ஹூண்டாய் மோட்டார்சின் துணை நிறுவனம். ஒரே இடத்தில் தொழிற்சாலை வேண்டாம் என்று தான் அங்கு சென்றுள்ளனர்.

அமைச்சர் பி.தங்கமணி:- ஏற்கனவே, இந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன. போக்குவரத்து வசதிக்காக தங்களது நிறுவன விரிவாக்கத்தை அருகில் உள்ள மாநிலத்தில் தொடங்குகிறார்கள்.

கொரியா நாடு அதிக முதலீடு

அமைச்சர் எம்.சி.சம்பத்:- எம்.ஆர்.எப். நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி விரிவாக்க திட்டத்துக்கும், ஹூண்டாய் நிறுவனம் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கவும் முதலீடு செய்துள்ளன. இந்தியாவிலேயே கொரியா நாட்டின் முதலீடு அதிகம் தமிழ்நாட்டிற்குத்தான் கிடைத்துள்ளது.

உறுப்பினர் ராமச்சந்திரன்:- வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் ஆர்வத்தை உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு காட்ட வேண்டும். ஜவுளி தொழில் நலிவடைந்துள்ளதால், ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான பதிவு 50 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளன. திருப்பூர், கோவை, சேலம் போன்ற பகுதிகள் சிறந்து விளங்குகிறது என்றால், அது உள்ளூர் முதலாளிகளால் தான். எனவே, இருக்கும் தொழிலை காப்பாற்ற முதலாளிகளை அழைத்து பேச வேண்டும். அவர்கள் கேட்கும் சலுகைகளையும் அரசு கொடுத்தால், உள்நாட்டு தொழில் வளரும்.

அனைவருக்கும் ஒரே கொள்கை

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- உங்கள் ஆட்சியில் மின்வெட்டு இருந்ததால், தொழில் வளர்ச்சி குறைவாக இருந்தது. இப்போது, இந்தியாவிலேயே ஜவுளி தொழிலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. எனவே, ஒரு சில தொழிற்சாலை மூடப்பட்டதை வைத்து சொல்லக்கூடாது.

அமைச்சர் பி.தங்கமணி:- எங்கே இருந்து தொழில் தொடங்க வந்தாலும், அனைவருக்கும் ஒரே கொள்கை தான். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. தொழில் தொடங்க ஒற்றை சாளர முறை மூலம் ஒரு மாதத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

வெள்ளை அறிக்கை வேண்டும்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் 61 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஆனால், அதற்கு தேவையான கச்சா பொருட்கள் 5 சதவீதம் அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 95 சதவீதம் பிற மாநிலங்களில் இருந்தே பெறப்படுகிறது. பின்னலாடைகள் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் அளவை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிக்கு வரியை அரசு உயர்த்தி உள்ளது. அதனால், இந்தியாவுக்கு ஜவுளி உற்பத்தி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

உறுப்பினர் ராமச்சந்திரன்:- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு 30 நாட்களில் அனுமதி அளிக்கப்படும் என்றீர்கள். எவ்வளவு நிறுவனங்களுக்கு அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி முதலீடுகள் இன்னும் வரவேண்டியுள்ளது. இது தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திருச்சியை தாண்டி அறிவிப்பு வருவதில்லை

அமைச்சர் எம்.சி.சம்பத்:- ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 25 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். தற்போது, தமிழகத்தில் மிகை மின்சாரம் உள்ளது. எனவே, தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.

அமைச்சர் பி.தங்கமணி:- முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் கோடி மின் துறை சம்பந்தமானது. மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு வழங்க முடியாது என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்ததால், அதை நாம் ஏற்கவில்லை. தொழில் முதலீடு 50 சதவீதம் வந்தாலே அது வெற்றி தான். நமக்கு 60 சதவீதத்துக்கு மேல் வந்துள்ளது. மேலும், அதற்கான கால அளவு 7 ஆண்டுகள் இருக்கிறது.

உறுப்பினர் ராமச்சந்திரன்:- சட்டசபையில் முதல்-அமைச்சர் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கும் அறிவிப்புகள் திருச்சியை தாண்டி வருவதில்லை. தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அதற்கு அரசு என்ன செய்யப்போகிறது?. தூத்துக்குடி-மதுரை இடையே தொழில் பெருவழி சாலை திட்டம் இன்னும் நிறைவேறாத போது, இப்போது சென்னை-கன்னியாகுமரி இடையே அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி நிறைவேற்ற முடியும்?.

தென் மாவட்டங்கள் புறக்கணிப்பா?

அமைச்சர் எம்.சி.சம்பத்:- சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் பெருவழி சாலைக்கு திட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் தென் மாவட்டங்களுக்குத்தான் கிடைத்துள்ளன.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:- தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர் குறிப்பிடுகிறார். தென் மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த பார்க்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்டத்துக்குத்தான் கிடைத்துள்ளது. அதிக அளவில் சாலைகள் அங்குதான் மேம்படுத்தப்பட்டுள்ளன. நிறைய தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன.

உறுப்பினர் ராமச்சந்திரன்:- உங்கள் (ஆர்.பி.உதயகுமார்) திருமங்கலம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட சிப்காட் இதுவரை வந்ததா?.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:- அது அங்குள்ள விவசாயிகளின் நலன் கருதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தடுக்கப்படவில்லை. துணைக்கோள் நகரமாக திருமங்கலம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story