சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்பவர்களுக்கு உடந்தையான இன்ஸ்பெக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்பவர்களுக்கு உடந்தையான இன்ஸ்பெக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 8:22 PM GMT)

நங்கநல்லூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக உள்ள 2 இன்ஸ்பெக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை அருகே உள்ள நங்கநல்லூர், பழவந்தாங்கல் குடியிருப்பு பகுதிகளில் இருந்து நிலத்தடிநீர் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பெருந்தொகைக்கு விற்பதாக இளையராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுக்கப்படுவதாக மேலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நிலத்தடிநீரை எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் எடுப்பது சென்னை பெருநகர பகுதி நிலத்தடிநீர் ஒழுங்குமுறை சட்டத்தின்படி குற்றமாகும். அந்த சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இன்ஸ்பெக்டர்கள் உடந்தை

மேலும், மனுதாரர்கள் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வக்கீல் எல்.சந்திரகுமார் என்பவரை வக்கீல் ஆணையராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வக்கீல் ஆணையர் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘நங்கநல்லூரில் ஆய்வு செய்தபோது பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் நடராஜ் எனக்கு போன் செய்து, தன் அனுமதியில்லாமல் எப்படி ஆய்வு செய்யலாம்? என்று மிரட்டினார். மேலும், நங்கநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்பதை கேள்வி கேட்ட அப்பகுதி மக்களையும் இன்ஸ்பெக்டர் நடராஜ் மிரட்டியுள்ளார். நிலத்தடிநீர் எடுப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் நடராஜும், மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரும் உடந்தையாக உள்ளனர். இவர்களது மேற்பார்வையில் தான் இந்த சட்டவிரோத செயல்கள் நடக்கிறது’ என்று கூறியிருந்தார்.

சட்டப்படி நடவடிக்கை

அறிக்கையை படித்த நீதிபதிகள் இன்ஸ்பெக்டர்கள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், ‘ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் ஆணையரை இன்ஸ்பெக்டர் எப்படி கேள்வி கேட்கலாம்?’ என்று அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டனர்.

இதையடுத்து, ‘வக்கீல் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில், பாரபட்சம் இல்லாமல் சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அவர்கள், சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்பதை தடுக்க ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும். அவர்களுக்கு உடந்தையாக உள்ள 2 இன்ஸ்பெக்டர்கள் மீது பாரபட்சமில்லாத விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story