ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி
ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்து, இந்த அமர்வு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில்,
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.
நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.
கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.
மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
Related Tags :
Next Story