அவதூறாக பேசிய தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொரட்டி பட கதாநாயகி சத்தியகலா பேட்டி
என் பெற்றோர் பற்றி அவதூறாக பேசிய தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று தொரட்டி பட கதாநாயகி சத்தியகலா கூறினார்.
கோவை,
சென்னை ஐகோர்ட்டில் பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தொரட்டி என்ற படத்தில் நான் கதாநாயகனாக நடித்துள்ளேன். அந்த படத்தின் கதாநாயகியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சந்தியா என்ற சத்திய கலா(வயது 26) என்பவர் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைப்படம் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட திட்டமிட்டிருந்தோம். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சத்தியகலா வரவில்லை. அவரை சட்டவிரோதமாக அவரது தந்தை பிடித்து அடைத்து வைத்துள்ளார். எனவே சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
கோவையில் சத்தியகலா பேட்டி
இதைத் தொடர்ந்து சத்தியகலா தற்போது எங்கே உள்ளார் என்று வருகிற 5-ந்தேதி போலீஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடிகை சத்தியகலா கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை யாரும் கடத்தவில்லை. நான் பெற்றோரோடு சொந்த ஊரான பொள்ளாச்சியில் பத்திரமாக இருக்கிறேன். தொரட்டி படத் தயாரிப்பாளரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருந்தேன்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆனால் என் மீது அவதூறு பரப்பும் வகையிலும் படத்திற்கு எதிர்மறை விளம்பரம் தேடும் செயல்களிலும் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளார். எனக்கு பேசிய சம்பளத்தில் இதுவரை ரூ.50 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். ஆனால் அந்த சினிமாப்படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவர உள்ளதால் அதுபற்றி எனக்கு வருத்தம் இல்லை.
நான் மாயமானதாக கூறுவது தவறு. என்னை யாரும் கடத்தவில்லை. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் அங்கு முறையிடவில்லை.
படத்தயாரிப்பாளர் எனது பெற்றோர் பற்றி அவதூறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பிரச்சினையில் மூன்றாம் நபர் மூலம் சமாதானம் பேச முயன்றனர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். என்னை பற்றிய சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இப்போது எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நடிகை சத்தியகலாவின் தந்தை ரத்தினம், தாயார் பாரதி, வக்கீல் மயில்வாகனம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story