தந்தை-மகன் படுகொலை வழக்கில் துரித விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
தந்தை-மகன் படுகொலை வழக்கில் துரித விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கரூர்,
திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60), விவசாயியான இவர், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான 39 ஏக்கர் சுற்றளவில் உள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக, மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி (42) ஆகிய இருவரையும் முதலைப்பட்டியில் கடந்த 29-ந்தேதி அரிவாளால் வெட்டியது. இதில் தந்தை-மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த கொலை தொடர்பாக வீரமலையின் மகள் அன்னலெட்சுமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் முதலைப்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தன் (23), பெருமாள் (35), சசிக்குமார் (33) உள்பட 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரணடைந்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன்குமார் (23) என்பவர் திருச்சி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரணடைந்தார். இந்தநிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரிடம் கேட்டபோது, தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் துரிதமாக விசாரணை மேற்கொள்ளாத காரணத்தினால் அவரை டி.ஐ.ஜி. பால கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கொலை வழக்கில் எத்தனை நபர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து கொலையாளிகளை விசாரணை செய்யும்போது தெரியவரும், என்றார்.
Related Tags :
Next Story