‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 4 Aug 2019 2:15 AM IST (Updated: 4 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனவேதனை அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

நெல்லை,

நெல்லை ஊருடையார்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் தனலட்சுமி (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்து உள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தனலட்சுமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பிளஸ்-2 முடித்த தனலட்சுமி மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனால் அவர் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்‘ தேர்வை எழுதினார். ஆனால் அதில் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரால் மருத்துவபடிப்பு படிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் மாணவி எழுதிய உருக்கமான கடிதம் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. அந்த கடிதத்தில், “நீட்‘ தேர்வில் குறைந்த மார்க் கிடைத்துள்ளதால், மருத்துவம் படிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் வெற்றி பெற்று டாக்டராகி இருந்தால் எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைபட்டு கிடக்கிறேன். எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்கிறேன்‘ என்று எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில் எழுதியதை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர். இந்த கடிதத்தை வைத்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story