வேலூர் மக்களவை தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவு
வேலூர் மக்களவை தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
வேலூர்,
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடக்கிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
வேலூர் - 54.93%, அணைக்கட்டு - 62.76%, கே.வி.குப்பம் - 55.52%, குடியாத்தம் - 44.38%, வாணியம்பாடி - 46.71%, ஆம்பூர் - 50.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Related Tags :
Next Story