நீர்வளம், விவசாயத்தை மேம்படுத்த தடுப்பணை கட்டுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நீர்வளம், விவசாயத்தை மேம்படுத்த தடுப்பணை கட்டுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தடுப்பணைகள்
நீர்வளத்தை மேம்படுத்துவதில் தடுப்பணைகளுக்கு எத்தகைய பங்கு இருக்கிறது என்பதை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஆதாரங்களுடனும் நிரூபித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகள் தமிழகத்தை கடுமையாக வாட்டத் தொடங்கிவிட்ட நிலையில், நீர் வளத்தையும், விவசாயத்தையும் வலுப்படுத்த தடுப்பணைகள் தான் சிறந்தவழி என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.
பா.ம.க. இதைத்தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நில அமைப்பைப் பொறுத்து 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனைகளை பா.ம.க. வழங்கி வருகிறது.
காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் சிறிய ஆறுகளின் குறுக்கே 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருப்பது நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். முதல்-அமைச்சர் அறிவித்த 10,000 தடுப்பணைகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முடித்து கட்டுமான பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கள் இயக்கம்
தடுப்பணைகளை கட்டுவதையும், பராமரிப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் தடுப்பணைகள் கட்டுவதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்படும் தடுப்பணைகளில் இருந்து அசுத்தமான நீரை வெளியேற்றுதல், தடுப்பணைகளை தூர்வாருதல் ஆகிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றையும் அரசு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story