காஷ்மீர் பிரச்சினை, சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் கூடுதல் டி.ஜி.பி.க்கள் நியமனம்
காஷ்மீர் பிரச்சினை மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரித்ததையொட்டியும், வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டியும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழக அரசுக்கும் நேற்று மாலை மத்திய அரசின் எச்சரிக்கை தகவல் வந்தது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தி டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் முறையில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மசூதிகள், கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள்.
ஆர்ப்பாட்டங்கள் நடத்த கட்டுப்பாடு
மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்படும். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாராவது அக்கம்பக்கத்தில் தங்கி இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின விழா முடியும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும். முக்கியமான இடங்களில் தினமும் வாகன சோதனை நடத்தப்படும். நெடுஞ்சாலை பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் டி.ஜி.பி.க்கள்
இதற்கிடையே காஷ்மீர் பிரச்சினையையொட்டி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கீழ்க்கண்ட 5 கூடுதல் டி.ஜி.பி.க்கள் பகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நகரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் சரகங்களுக்கு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், திருச்சி நகரம் மற்றும் மத்திய மண்டல பகுதிக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு வடக்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், திருநெல்வேலி நகரம் மற்றும் திருநெல்வேலி சரக பகுதிக்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று இரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story