நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலி சுண்ணாம்பு பாலம், பார்வுட், பாண்டியாறு, புத்தூர்வயல், பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழை காரணமாக கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இதனிடையே இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. இதனால் கூடலூர் பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
நொய்யல் ஆறு
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் வழியாக பாய்ந்தோடி காவிரி ஆற்றில் கலக்கிறது. தென்மேற்கு பருவ மழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் இருகரையையும் தொட்டபடி செல்லும்.
ஆனால் இந்த ஆண்டில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்லவில்லை. இந்த நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் இருகரைகளை தொட்டபடி புதுவெள்ளம் பொங்கி ஓடியது.
தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
இந்த ஆற்றின் குறுக்கே பேரூர் படித்துறை பகுதியில் உள்ள தரைப்பாலத்தை உடைத்து விட்டு அங்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அதன் அருகே தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.
கோவை அருகே உள்ள கோவை குற்றால அருவியில் தண்ணீர் அதிகமாக வந்ததால், சுற்றலா பயணிகள் குளிக்கும் இடம் தெரியாத அளவுக்கு தண்ணீர் பாய்ந்து ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காட்டில் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பில்லூர் அணை 97 அடியை தாண்டி நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றுக்கு திறக்கப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story