போலி அட்டைகளை ஒழிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி 16-ந் தேதி தொடக்கம் சத்யபிரத சாகு தகவல்
போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க, வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தாங்கள் அளித்த ஓட்டை உறுதி செய்யும் 17 ‘விவிபேட்’ எந்திரங்கள் மற்றும் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் உடனடியாக அவை மாற்றப்பட்டன.
ஓட்டுப்பதிவின் போது பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக தொலைக்காட்சிகளில் காட்சிகள் வந்தன. ஆனால் அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது.
16-ந் தேதி தொடக்கம்
போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் 16-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை 2020-ம் ஆண்டுக்கான, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு-நீக்கம், சரிபார்ப்பு, திருத்தம் செய்வது, கூடுதல் தகவல்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இந்த முகாமில், வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அட்டையில் புதிய புகைப்படங்களை மாற்றுவது, பெயர்களை திருத்துதல் மற்றும் புதிதாக சேர்த்தல், இ-மெயில் முகவரிகளை சேர்த்தல், செல்போன் எண்களை இணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், ஆன்லைன், ‘மொபைல் ஆப்’, தேசிய வாக்காளர் சேவை மையம் (என்.வி.எஸ்.பி.) மற்றும் தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாகவும் பெயர் சேர்த்தல்-நீக்குதல் பணிகளை செய்யலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி
அத்துடன் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக உள்ளதா? கூடுதல் வாக்குச்சாவடிகள் தேவைப்படுகிறதா? என்பது குறித்தும் வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களில் உள்ள 1950 என்ற தொலைபேசி எண்ணில் தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முகாமை தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை வீடு, வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுகிறது. இந்த முகாமை நடத்துவது தொடர்பாக 8-ந் தேதி (நாளை) மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.
இறுதி பட்டியல் எப்போது?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன் பின்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story