நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் - கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச்சு
நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
சென்னை,
கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி மம்தா பானர்ஜி பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலினின் போராட்ட குணத்திற்கு அவரது பெயரே காரணம். கருணாநிதி மறைந்தாலும் இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார். நானும் இந்தியர் தான், மு.க.ஸ்டாலினும் இந்தியர் தான், அதனால் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது.
காஷ்மீர் தலைவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும், மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள்.
தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி. கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர். கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு, உரிமை உண்டு, அந்த உரிமைக்காக நாம் போராடுவோம். கருணாநிதியை யாரும் மறந்துவிட முடியாது, காரணம் அவரது செயல்பாடுகள் தான்.
எந்த முடிவெடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தமிழ் மக்கள் எப்போதும் தைரியமானவர்கள். அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.
தமிழில் வணக்கம் என்ற வார்த்தையை கூறுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். 'அனைவருக்கும் வணக்கம்’என்று தமிழில் கூறி உரையை மம்தா பானர்ஜி நிறைவு செய்தார்.
Related Tags :
Next Story