தேசபக்தி என்ற பெயரில் பா.ஜ.க. மதவெறியை தூண்டுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தேசபக்தி என்ற பெயரில் பா.ஜ.க. மதவெறியை தூண்டுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Aug 2019 4:15 AM IST (Updated: 8 Aug 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. ஆட்சியில் சமூகநீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், தேசபக்தி என்ற பெயரில் பா.ஜ.க. மதவெறியை தூண்டுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க. தொண்டர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

மவுன அஞ்சலி

பொதுக்கூட்டம் தொடங்கியதும், முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆயிரம் விளக்கு உசேன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிப்பதற்கான இரங்கல் குறிப்பை மு.க.ஸ்டாலின் வாசித்தார். அதனை தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

விழாவுக்கு வந்தவர்களை முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு சிறிய வடிவிலான கருணாநிதி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு மலரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். அதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெற்றுக்கொண்டார்.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்

ஆகஸ்டு 7 தமிழக வரலாற்றில், தி.மு.க. வரலாற்றில் மறக்க முடியாத நாள், இன்னாள். எவரை உயிர் என்று பாதுகாத்து வைத்திருந்தோமோ அவர் தனது அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுக்க சென்ற நாள். நடக்க கூடாதது நடந்துவிட்டது. இழக்க கூடாதவரை இழந்து இருக்கிறோம். 50 ஆண்டுகள் தி.மு.க.வை வளர்த்து கொடுத்தவர் கருணாநிதி. மத்திய ஆட்சி சக்கரத்தை சுழற்றியவர். முதுமை காரணமாக அவர் வீட்டில் ஓய்வெடுத்தபோது, அண்ணா அறிவாலயம் போகலாமா? என்றால் அவரது கண்கள் விரிந்தன. பேனா கொடுத்தால் அண்ணா என்றே எழுதினார். இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் இப்படியொரு தலைவர் இல்லை.

இன்னும் சில ஊர்களில் அவரது சிலை வைக்கப்பட உள்ளது. முரசொலியில் உட்கார்ந்து எழுதி கொண்டிருப்பார். மடியில் வைத்து எழுதுவது தான் அவருக்கு பிடிக்கும். அதுபோன்று தான் இந்த சிலையை வடிவமைத்து இருக்கிறோம். கருணாநிதியை பெருமைப்படுத்த சிலை திறக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளில் அடைய வேண்டிய புகழை நூறு ஆண்டிலேயே பெற்றவர் அவர். அந்த சிலைகள் நம்முடைய கொள்கைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறது. நம்முடைய இலக்கை அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறது.

பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும், மொழி பற்றுக்கும், இனப்பற்றுக்கும், சமூக நிதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் காலம் இப்போது உருவாகியிருக்கிறது. எனவே தான் கருணாநிதி முன்பை விட இப்போது நமக்கு தேவைப்படுகிறார். சமூகநிதிக்காக கருணாநிதி பாடுபட்டார். அந்த கொள்கைக்கே உலை வைக்கும் அளவுக்கு பொருளாதார அளவீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.

பரூக் அப்துல்லா ஏன் வரவில்லை

ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை என்று எல்லாவற்றையும் டெல்லியில் குவித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்குவதற்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தினமும் போராடும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரம் கருணாநிதி நம்முடன் இருந்திருந்தால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து இருப்பார். நம்முடைய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழில் கம்பீரமாக பதவியேற்றார்கள். நம்முடைய எம்.பி.க்கள் டெல்லியை நடுநடுங்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், பொருளாதார இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மீது தாக்குதல், தபால் தேர்வுகளில் இந்தி திணிப்பு, சேலம் 8 வழிச்சாலை, நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, அணை பாதுகாப்பு மசோதா போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுத்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களும், நம்முடைய கூட்டணி எம்.பி.க்களும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி உயிரோடு இருந்தால் என்ன எதிர்பார்ப்பாரோ? அதனை நம்முடைய எம்.பி.க்கள் செய்து வருகிறார்கள். இப்போது உச்சக்கட்டமாக காஷ்மீர் பிரச்சினை வந்து இருக்கிறது. மம்தா பேசும்போது குறிப்பிட்டார், பரூக் அப்துல்லா இங்கே இந்த மேடையில் இருந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லையே ஏன்?. அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார். அதனால் இந்த மேடைக்கு வர முடியாத நிலை.

தி.மு.க. எதிர்க்கும்

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைபாடு. தேசிய ஒருமைப்பாட்டு பாடத்தை யாரும் எங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் ஆபத்து வந்ததா? இல்லையா?. நாங்கள் யார் பக்கம் நின்றோம், நாட்டின் பக்கம் நின்றோம். ஆனால் இன்றைக்கு தேசபக்தி என்ற பெயரால் மதவெறியை தூண்டும் காரியத்தை பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், இந்த போலி தனத்தை தி.மு.க. உறுதியாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

காஷ்மீரில் மீண்டும் கருப்பு வரலாற்றை பா.ஜ.க. எழுத நினைக்கிறது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைபாடு.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இலக்கிய அணி புரவலர் இந்திராகுமாரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மேற்கு வங்காள எம்.பி. தினேஷ்திரிவேதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story