அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் அறநிலையத்துறை நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது என்று அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை,
காஞ்சீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து நடந்து வருகிறது. இதில் முதல் 24 நாட்கள் சயனக் கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள்பாலிப்பார்.
அந்தவகையில் தற்போது நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். இந்த வைபவம் நிறைவு பெற்ற உடன் ஆதி மூலவராக இருந்த அத்திவரதர், அனந்தசரஸ் என்ற கோவில் தெப்பக்குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தின் அடியில், வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைக்கப்பட உள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
இதனால் தற்போது அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு இடையே போட்டோ போட்டி ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் காஞ்சீபுரத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சீபுரத்துக்கு திரண்டு வருகிறார்கள்.
காஞ்சீபுரத்திற்கு வெளியே 7 கிலோ மீட்டருக்கு முன்பாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவது, குடிநீர், கழிப்பிடம், குளிக்கும் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகள் போதுமானதாக அமைக்காதது, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளிடம் கருணையோடு நடக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு குறைகளை பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்
இதுகுறித்து தமிழக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
காஞ்சீபுரத்திற்கு அதிகமான வாகனங்களில் பக்தர்கள் திரண்டு வருவதால், கூடுதல் வாகனங்களை அங்குள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்கு ஓய்வறைகள் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து செல்ல கூடுதல் சக்கர நாற்காலிகள் வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது.
வி.ஐ.பி.க்கள் மற்றும் டோனர் பாஸ் வைத்திருப்பவர்கள் சாமி தரிசனம் செய்வதில் பிரச்சினைகள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் காவல் துறை அதிகாரிகளுக்கு போதுமான உத்தரவுகளை காவல்துறை உயர் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர்.
லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால் காஞ்சீபுரம் நகரப்பகுதிகளில் தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் துப்புரவு பணியாளர்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து வாகனங்களுடன் அனுப்பப்பட்டு உள்ளனர். பக்தர்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடிநிற்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க, கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவ குழுக்கள்
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லவும், காணாமல் போனவர்களை உடனுக்குடன் கண்டுப்பிடித்து தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு தரமான குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் ஆங்காங்கே வழங்கப்படுகிறது. அவை சுகாதாரத்தோடு வழங்கப்படுகிறதா? என்று கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கூட்டநெரிசலில் சிக்கி தவிக்கும் முதியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் அதனை தடுப்பதற்காக மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களால் உள்ளூர் வாசிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை போக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்து செல்ல அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story