வேலூர் கோட்டையை கைப்பற்றிய திமுக... கதிர் ஆனந்த் வெற்றி... தொண்டர்கள் கொண்டாட்டம்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
வேலூர்
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.
தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருந்தது. முதல் 15 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து வாக்கு எணிணிக்கை நடைபெற்ற போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இறுதி சுற்று முடிவின் போது கதிர் ஆனந்த் 9 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 4.30 மணிக்கு வெளியிடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வேலூர் மக்களவை தேர்தல் முடிவையொட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அது போல் ஸ்டாலின் வீட்டின் முன்பும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Related Tags :
Next Story